அழகிரி திமுகவில் இல்லாததால் அவரது கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கூறியுள்ளார். அழகிரி என்ன கருத்து சொன்னாலும் வெளியே இருந்து சொல்லும் கருத்தாகும். அவர் ஏற்கனவே கருணாநிதியால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். இதற்கு விரிவான தகவலை நாளைய செயற்குழுவில் ஸ்டாலின் தெரிவிப்பார் என்றார். 

முன்னதாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தந்தையிடம் எனது ஆதங்கத்தை தெரிவித்துக்கொண்டேன் என்றார். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. அதை காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். 

திமுகவில் கட்சிப் பதவிகள் விற்கப்படுகின்றன. நான் திரும்பவும் திமுகவிற்கு வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. இதை கூறிவிட்டு அழகிரி கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் கூறுகையில் கட்சி ரீதியிலான எனது ஆதங்கத்தை இன்னும் 3 நாட்களில் தெரிவிப்பேன் என்று கூறி தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தினார். நாளை திமுகவின் செயற்குழு நடைபெற உள்ள நிலையில் அழகிரி இவ்வாறு பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கூறுகையில் திமுகவில் இல்லாத அழகிரியின் கருத்துக்கு எந்த பதிலும் அளிக்க வேண்டியதில்லை. அவர் கட்சியில் இல்லாததது கருணாநிதி எடுத்த முடிவாகும். அவர் பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார். கருணாநிதி மறைவில் இருந்தே இன்னும் நாங்கள் மீளவில்லை. கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது என ஜெ.அன்பழகன் பேட்டியளித்துள்ளார்.