கொல்லைப்புறமாக திமுக ஆட்சிக்கு வராது என்றும், அதிமுக அரசு பெரும்பான்மை இல்லை என்பது மட்டுமே ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்திப்பின்போது எடுத்துரைக்க உள்ளதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி ஆளுநரை இன்று  மாலை 5 மணிக்கு  மு.க.ஸ்டாலின்  சந்தித்து கடிதம் கொடுக்கவுள்ளார். அதேபோல், சபாநாயகர் தனபாலையும் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது பேசிய அவர், ஒருபோதும் கொல்லைப்புறமாக திமுக ஆட்சிக்கு வராது என்றார். அதிமுக அரசு பெரும்பான்மை இல்லை என்பது மட்டுமே ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் உடுத்துரைக்க உள்ளதாகவும் கூறினார். ஆட்சி எப்போது அகற்றப்படும் என்ற எண்ணம் எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., க்களை சேர்த்து ஆளுங்கட்சிக்கு 119 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தெரிந்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். பெரும்பான்மை கணக்கு கூட ஆளுநருக்கு தெரியாதா? அவருக்கு அனைத்தும் தெரிந்தும், நடவடிக்கை எடுக்காததற்கு மத்திய அரசே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்

ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து அழுத்தம் தரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

அதிமுகவில் இருந்து வந்தாலும் உண்மையான உழைப்புக்கு திமுகவில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.