The Deputy Chief Minister will take action against the ministers who committed corruption -

புதுக்கோட்டை

ஊழல் செய்த அமைச்சர்கள் மீது துணை முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்க.தமிழ்செல்வன் கூறினார்.

புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பரணி.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நகர செயலாளர் வீரமணி வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன் பேசியது:

"தமிழ்நாட்டில் உள்ள தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரனுடன் தான் உள்ளனர். வருகிற சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் டி.டி.வி.தினகரன் அணி அதிக இடங்களில் வெற்றிபெற்று, அவரது தலைமையில் புதிய அரசு அமையும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், கார்த்திக் பிரபாகரன் மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டத்தின் இறுதியில் ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி நன்றி தெரிவித்தார்.

பின்னர், தங்க.தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியது: "உள்ளாட்சித் தேர்தலில் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், அவ்வாறு கேட்பதற்கு எங்களுக்கு அதிகாரம் கிடையாது என்றும், உள்ளாட்சி தேர்தல் என்பது மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

குக்கர் சின்னம் கேட்டு நாங்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

ஊழல் செய்த அமைச்சர்கள் மீது துணை முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று டி.டி.வி.தினகரனின் சகோதரர் பாஸ்கரன் கூறியிருப்பது மிகப்பெரிய நகைச்சுவை.

எங்கள் அணியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர்" என்று அவர் பேசினார். .