The Delhi High Court refuses to ban the Election Commissions recommendation to disqualify legislators
ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு டெல்லியில் அமைச்சர்களுக்கு உதவியாக 20 எம்.எல்.ஏக்களை செயலர்களாக முதல்வர் கேஜ்ரிவால் நியமித்தார்.
இதற்காக டெல்லி மாநில சட்டமன்றத்தில் சிறப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. பின், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. டெல்லி மாநில அரசுக்கான சட்டத்தின் படி, முதல்வர் அலுவலகத்துக்கு மட்டுமே ஒரு செயலரை நியமிக்க முடியும். ஆனால், முதல்வர் கேஜ்ரிவாலோ 20 செயலர்களை நியமித்தார். இதையடுத்து 20 எம்.எல்.ஏக்களும் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக கூறி பிரசாந்த் படேல் என்ற வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதை விசாரித்த தேர்தல் ஆணையம், எம்.எல்.ஏ பதவியில் இருந்து உங்களை ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியதோடு, இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏக்களின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.
இதைதொடர்ந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 6 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். ஆனால் தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
