சாட்சியம் அளித்த காவலர் ரேவதியிடம் நீதிபதிகள் தற்போது பேசி வருகின்றனர். தைரியமாக சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக தலைமை காவலர் ரேவதியின் சாட்சியம் கருதப்படும் நிலையில் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஏற்கனவே மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ரேவதியின் கணவர் அளித்த பேட்டியில், ’இரவு 10 மணி அளவில் தொலைபேசியில் என்னிடம் பேசிய எனது மனைவி ’தந்தை மகன் ஆகிய இருவரையும் போலீசார் அடித்து கொண்டிருப்பதாக கூறினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் எனது மனைவியிடம் தண்ணீர் கேட்டதாக எனது மனைவி வருத்தத்துடன் கூறினார்.


 
நள்ளிரவு இருவரையும் மீண்டும் அடித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் கூறிய ரேவதி என்னிடம் கூறினார். சம்பவம் நடந்தபோது தான் பணியில் இருந்ததால் தனக்கும் சிக்கல் வரும் என்று ரேவதி என்னிடம் போனில் வருத்தப்பட்டபோது அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். போலீசாரால் அடிக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டு எனது மனைவி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இந்த வழக்கு குறித்து சாட்சி அளிக்க எனது மனைவி சென்ற போது எனது மூத்த மகள், ‘அம்மா தைரியமாக உண்மையை சொல்லும்மா என்று கூறினார். 

இந்த வழக்கு குறித்தும் உண்மையில் போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது என்பது குறித்தும் எனது மூத்த மகளுக்கு தெரியாது. என்றாலும் அவர் தனது தாயாருக்கு தைரியம் கூறினார். இந்த வழக்கில் எங்கு வேண்டுமானாலும் தனது மனைவி உண்மையை சொல்ல தயாராக இருக்கிறார். ஆனால், அதே நேரத்தில் அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்’’என்று கோரிக்கை விடுத்துள்ளார்.