புதிய காங்கிரஸ் தலைவர் யார்..? நாளை வாக்கு எண்ணிக்கை..! தமிழகத்தில் வாக்களிக்காத 7% பேர்..!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் 93% பேர் வாக்களித்துள்ள நிலையில் 7% பேர் வாக்களிக்கவில்லெயென கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
137 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியின் 6 வது முறையாக தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிடுகின்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து 2019-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஏராளமான தலைவர்களின் பெயர்கள் கூறப்பட்டது. இறுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து நேற்று தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் வாக்குபதிவு
புதுடெல்லி உள்பட நாடு முழுவதிலும் 65 வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு பதிவு நடைபெற்றது. புதுடெல்லியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது மகளும் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்தியுடன் வந்து இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வாக்களித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பியுமான ராகுல் காந்தி,இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருவதால், கர்நாடகாவின் பெல்லாரி அருகே உள்ள சங்கனகல்லு என்ற இடத்தில் அமைக்கப்பட்ட வாகன வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். இதே போல தமிழகத்தில் சத்திய மூர்த்தி பவனில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியில் தமிழக தலைவர்கள் வாக்களித்தனர். வாக்கு பதிவுக்கு பிறகு தமிழகத்திற்கான தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா கூறுகையில், சென்னையில் 711 வாக்குகளில் மொத்தம் 662 வாக்குகள் பதிவாகியுள்ளன, இது சுமார் 93% ஆகும். சில தமிழ் வாக்காளர்கள் பல்வேறு காரணங்களுக்காக வேறு இடங்களில் வாக்களித்ததாக தெரிவித்தார்.
இதே போல நாடுமுழுவதும் 96% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 9,915 நிர்வாகிகளில் 9,500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்; வாக்குகள் நாளை (அக்டோபர் 19) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறினார். காங்கிரசில் கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தியும், ராகுல் காந்தியுமே தலைவர்களாக இருந்துள்ளனர். ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலத்தில் முதல்முறையாக காந்தி - நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.