தொடர் தோல்விகள், கட்சியை வழி நடத்த தலைவரைக்கூட தேர்வு செய்ய முடியாத நிலை, கோஷ்டிப் பூசல்கள் போன்றவை, காங்கிரஸ் என்ற மாபெரும் அரசியல் இயக்கத்தை வீழ்ச்சிப்பாதைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. திக்குத் தெரியாத காட்டில் தடுமாறும் காங்கிரஸ், இனியேனும் விழித்துக் கொள்ள வேண்டுமென்பது அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாகும்.

 நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்கி செழுமை பெற வேண்டுமென்றால், அங்கு ஆளுங்கட்சியும் அதற்கு சரிசமமாக எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் தற்போதைய அரசியல் சூழல், நேர்மாறாக உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பலம் நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்க, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரசோ, தேய்ந்து கொண்டே இருக்கிறது

.

நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கித் தந்த கட்சியை சேர்ந்தவன் என்று ஒரு காலத்தில் கதர்ச்சட்டை போட்ட காங்கிரஸார் பெருமைப்பட்டுக்குக் கொண்ட நிலை இருந்தது. 134 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இன்றைய வீழ்ச்சி, அக்கட்சி தொண்டர்களை மட்டுமின்றி, நடுநிலையாளர்களையும் கவலை அடையச் செய்துள்ளது.

 சுதந்திர இந்தியாவின் முதல் முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜனதாகட்சியிடம் முதல்முறையாக மண்ணைக் கவ்வியது. அதற்கு நெருக்கடி நிலை பிரகடனம், முக்கிய காரணமாக அமைந்தது. பின்னர் 1980 நாடாளுமன்றத் தேர்தலில், 374 தொகுதிகளில் வென்று, மீண்டும் ஆட்சியை பிடித்து, இந்திரா காந்தி பிரதமரானார். கடந்த 1984ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்; அதையடுத்து, அரசியல் வாடையே தெரியாத அவரது மகன் ராஜிவ் காந்தி, திடீரென அரசியலில் களமிறக்கப்பட்டார். அவர் பிரதமரானார். 1984 டிசம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 414 இடங்களில் வென்றது காங்கிரஸ். சுதந்திர இந்தியாவில் வேறு எந்த பிரதமருக்கும் இத்தகைய பெருபான்மை பலம் இன்றுவரை கிடைத்ததில்லை.

ஆனால், அதன் பிறகு காங்கிரஸுக்கு இறங்குமுகம் தான். போபர்ஸ் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டது; அக்கட்சியில் இருந்து வி.பி.சிங் வெளியேறி ஜனதாதளம் கட்சி உருவாக்கினார்; 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி, ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் 197 தொகுதிகளில் மட்டும் வென்றது காங்கிரஸ்.

 கடந்த 1991 நாடாளுமன்றத் தேர்தலில், 244 இடங்களில் வென்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தது. பி.வி. நரசிம்மராவ் பிரதமரானார். 1996 பொதுத்தேர்தலில் 28.80 சதவீத வாக்குகளை பெற்று, 140 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வென்றது. 1998 பொதுத் தேர்தலில் 26.14 சதவீத வாக்குகளைப் பெற்று, 141 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வென்றது. வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. சோனியா தலைவரான பிறகு 1999ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், 28.30 சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ், 114 இடங்களில் மட்டும் வென்றது. வாஜ்பாய் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது.

தோல்வியில் இருந்து பாடம் கற்ற காங்கிரஸ், 2004 பொதுத்தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் திமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகளை இணைத்து, தேர்தலை சந்தித்தது. இதில், 145 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பெரும்பான்மை இல்லாத சூழலில், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்றது. அடுத்து வந்த 2009 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 206 இடங்களில் வென்று, மீண்டும் கூட்டணி ஆட்சி அமைத்தது. எனினும், 2ஜி ஊழல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தன. அதன்பலனாக, 2014 பொதுத் தேர்தலில், காங்கிரஸ் 44 இடங்களில் மட்டும் வென்று, வரலாற்றில் சந்திக்காத படுதோல்வியை கண்டது. அப்போது தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி இன்று வரை தொடர்கிறது.

 கடந்த 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, காங்கிரஸ் கட்சி மீண்டும் பழைய பலத்தை பெற்றுவிட்டதாக, பலரும் கருதினார்கள். ஆனால், 2019 பொதுத்தேர்தலில், 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்லமுடிந்தது. இளந்தலைவர் என்ற ராகுலின் வசீகரம் எடுபடவில்லை. தேர்தலில் அடைந்த தோல்வியை அலசி ஆராய்வதற்கு பதில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ஓட்டம் பிடித்தார். இடைக்கால தலைவராக, சோனியா பொறுப்பேற்றார். 

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகி ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் அக்கட்சிக்கு முழு நேரத் தலைவர் நியமிக்கப்படவில்லை. ராகுல் அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று பொழுதுபோக்குவதில்தான் ஆர்வம் காட்டுகிறார். காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் நடத்தி, தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட வேணடும் என்று, மூத்த தலைவர்கள் வலியுறுத்தியும், இதுவரை சோனியாவோ, ராகுலோ இதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

மூத்த தலைவர் கபில் சிபல், “தலைவர் இல்லாமல், ஒரு கட்சியால் எப்படி செயல்பட முடியும்? அதனால், காங்கிரசால் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட முடியவில்லை. செல்லும் திசை தெரியாமல், கட்சி தொண்டர்கள் தவித்து வருகின்றனர்” என்று மனம் நொந்து கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக சரியான தலைமை தேவையென்று, குலாம்நபி ஆசாத் டுவிட்டரில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

 பொதுத்தேர்தல்கள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸின் நிலை பரிதாப நிலைக்கு சென்றுவிட்டது. ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்கள் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கியது; அங்கு அனைத்திலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. வட மாநிலங்களில் அரியணையை இழந்த காங்கிரஸ் கட்சி, தெற்கில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக்காக மாநில கட்சிகளிடம் கெஞ்சும் நிலையில்தான் உள்ளது.

அண்மையில் நடந்த பல தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு சதவீதத்தை, மாநிலக் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டு பார்த்தால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சரிவை நோக்கி பயணித்து வருவதை நன்கு உணரலாம். பலவீனமான கட்சியின் நிலைமையை கண்டு அந்த கட்சியின் தலைவர்கள் மட்டுமின்று நடுநிலை அரசியல் நோக்கர்களே கவலை அடைந்துள்ளனர். கோஷ்டிப்பூசல்கள் இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால், களத்தில் பாஜக தலைவர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவதை, அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வியூகம் வகுப்பதையும், கட்டுப்பாட்டுடன் கட்சியை வழி நடத்துவதையும் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டுமென்று அவர்கள் கூறுகின்றனர்.

அண்மையில் சென்னைக்கு வந்த பாஜக தலைவர் அமித்ஷா, கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, அரசியல் ஆலோசனை, கூட்டணி தலைவர்கள் சந்திப்பு என்று, நள்ளிரவு 2:00 மணியை கடந்தும் ஓய்வின்றி உறக்கமின்றி பம்பரமாக சுழன்றதை, காங்கிரஸ் தலைவர்கள் கற்று உணர வேண்டும். ஒரு காலத்தில் இந்தியாவிலேயே மிக வலிமையான கட்சியாக திகழ்ந்த காங்கிரஸ், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சி செலுத்தி வந்தது. இன்றோ, கோஷ்டிப்பூசல், வலுவான நிலையான தலைமை இல்லாமல், சரியான திட்டம் வகுக்க முடியாமல், வலுவிலந்த நிலையில் திக்குத் தெரியாத காட்டில் தவிக்கிறது.

 இதில் இருந்து மீண்டும் இழந்த பலத்தை பெற, முதலில் வலுவான திறமையான தலைவரை காங்கிரஸ் தலைமை அடையாளம் காண வேண்டும். ஆளுங்கட்சியை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், ஆக்கப்பூர்வமாக களமிறங்கி தொண்டர்களை உற்சாகப்படுத்தி பணியாற்றினால் மட்டுமே, காங்கிரஸ் இழந்த பெருமையை மீண்டும் பெறும்.