கட்சியும், ஆட்சியும் தமது குடும்பத்தின் கட்டுப்பாட்டை விட்டு நழுவி விட கூடாது என்பதற்காக, சிறைக்கு செல்லும் கடைசி தருணத்தில் தினகரனை அதிமுகவின் துணை பொது செயலாளராக நியமித்துவிட்டு சென்றார் சசிகலா.

ஆனால் தினகரனோ, கட்சியும் ஆட்சியும், தனக்கு மட்டுமே சொந்தமான குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று, அனைத்து உறவுகளையும் அப்புறப்படுத்தினர்.

ஆனால், அவரே கட்சியை விட்டு அமைச்சர்களால் விலக்கி வைக்கப்படுவார் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.

இந்நிலையில், தினகரனின் பரம எதிரியாக கருதப்படும், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், முகநூலில் தினகரன் நீக்கம் குறித்த செய்தியை நியாயப்படுத்தி பதிவிட்டு இருந்தார்.

அதற்கு, இளவரசியின் மகன் விவேக் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால் கோபம் அடைந்த ஜெய் ஆனந்த், சட்டம் படிக்காத விவேக் சட்டம் படித்ததாக சொல்லி ஏமாற்றி வருகிறார் என்று நேரடியாக தாக்குதல் தொடுக்க ஆரம்பித்து விட்டார்.

அதற்கு பதில் அளித்த விவேக், எம்.பி.ஏ படித்து விட்டு, ஐ.டி.சி யில் வேலை பார்த்து வந்தேன். அம்மா அழைத்ததால் வேலையை விட்டு வந்து விட்டேன்.

நான் சட்டம் படித்ததாக யாரிடம் சொன்னேன். என்னுடைய பெயருக்கு பின்னால் எப்போது பி.எல் படித்ததாக போட்டு கொண்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் மகளை, ஜெய் ஆனந்த் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் விவேக் முகநூலில் குறிப்பிட்டு  இருந்தார்.

இதுபோன்ற குடும்ப ரகசியங்கள் வெளியில் கசிவது நல்லதல்ல என்று குடும்பத்தின் மூத்தவர்கள் வலியுறுத்தினாலும், அடுத்த தலைமுறை அதை ஏற்பதற்கு தயாராக இல்லை.

சசிகலா குடும்பத்தின் முதல் தலைமுறைகளுக்கு இடையிலான மோதல், நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் வேளையில், அடுத்த தலைமுறைகளின் மோதல்கள், முகநூல் வழியே வீதிக்கு வந்து சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டது.

அதனால், அணிகள் இணைப்பு முடிவடைவதற்குள், சசிகலா குடும்பத்து ரகசியங்கள் இன்னும், என்னென்னவெல்லாம் வெளிவர போகிறதோ? தெரியவில்லை என்று உறவுகள் கதறுகின்றன.