The Commission should order the EC to give more documents to the double leaf icon issue
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி டிடிவி தரப்பு உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளது.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது.
எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் குறித்து பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதைதொடர்ந்து இரட்டை இலை விவகாரத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் கோரி டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இதனை அடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி. சண்முகம் மற்றும் மைத்ரேயன் எம்.பி., கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் கடந்த 29 ஆம் தேதி டெல்லி சென்று பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடங்கிய கூடுதல் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
இதைதொடர்ந்து டிடிவி அணியும் தேர்தல் ஆணையத்தில் 1000 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தது. மேலும், 3 நாட்களுக்கு அவகாசம் கோரி தினகரன் தரப்பு மனு அளித்துள்ளது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி டிடிவி தரப்பு உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளது.
ஆவணங்கள் தாக்கல் செய்த பின் சின்னம் யாருக்கு என்பதை உத்தரவேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
