சாதாரண மனிதர்களுக்கு மட்டுமே அவர்களின் நிழல்கள் வெறும் கறுப்பு பிம்பமாக இருக்கும். ஆனால் வி.வி.ஐ.பி.க்களுக்கும், அதிகார மையங்களுக்கும் அப்படியில்லை. அவர்களின் நிழல்களுக்கு மூக்கு, முழி, பேச்சு, பெயர் என்று எல்லாமே இருக்கும். சாதாரண மனிதர்கள் தங்களின் நிழல்களை எந்த சூழலிலும் சார்ந்திருக்க தேவையில்லை. ஆனால் வி.வி.ஐ.பி.க்களோ இந்த நிழல்கள் இல்லாமல் அசையவும், பேசவும் ஏன் ஆளவும் கூட முடியாது.

ஆம் வி.வி.ஐ.பி.க்களின் நிழல்கள் அவர்களின் உதவியாளர்கள்தான். வி.வி.ஐ.பி.க்களும், அதிகார மையங்களும் கண் விழித்த நொடியிலிருந்து, இரவில் தூக்கத்திற்காக கண் மூடி நொடி வரையிலும்  இவர்களை சார்ந்தேதான் இருப்பார்கள். கருணாநிதியின் உதவியாளர் என்றவுடன் சண்முகநாதன் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருவார். ஆனால் அவர் அபீஸியலாகதான் கருணாநிதிக்கு உதவிகள் புரிவார். கருணாநிதி முதல்வராகவோ அல்லது எதிர்க்கட்சி தலைவராகவோ அல்லது தி.மு.க.வின் தலைவராகவோ எந்த நிலையில் இருந்தாலும் அதற்கேற்ப செய்திகளை தகவல்களை, தரவுகளை உடனுக்குடன் எடுத்து தருவது சண்முகநாதனின் பணி. 

ஆனால் சக்கர நாற்காலியே உலகம் என முடங்கிவிட்ட கருணாநிதியை அவரது இரண்டாவது தாய் போல் இருந்து கவனித்துக் கொண்டவர் நித்யானந்தன் எனும் நித்யா. சென்னை பல்லாவரம் தொகுதியை சேர்ந்த இளைஞனான இவருக்கு கோபாலபுரம் இல்லத்தின், கருணாநிதியின் வாரிசுகள் மற்றும் சொந்தபந்தங்களின் எல்லா விஷயங்களும், விவகாரங்களும் அத்துப்படி. 
சில நேரங்களில் கருணாநிதிக்கு அதிக செல்லம் கொடுத்து விடுகிறார்! என்று ஸ்டாலினிடம் திட்டும் வாங்கிக் கட்டியவர் நித்யானந்தன். 
கருணாநிதி மறைந்து, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு, வாரிசுகள் உட்பட உறவுகள் கிளம்பிவிட்ட நிலையில், இரவு முழுவதும் அந்த மூடப்பட்ட சமாதியின் அருகிலேயே படுத்திருந்து கதறிக் கண்ணீர் வடித்தவர் நித்யா. கருணாநிதியின் மறைவுக்குப் பின் தி.மு.க.வும், ஸ்டாலினும் தனக்கு பெரிய அங்கீகாரம் தருவார்கள் என்று எதிர்பார்த்தாராம், ஆனால் நிறைவேறவில்லை. இதனால் இவரை எடப்பாடியார் வசம் இழுத்துவிட்டது ஒரு டீம் என்கிறார்கள். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். புலவர் சங்கரலிங்கத்தின் மகன். டெல்டா தேசத்து இளைஞரான இவரை ஜெ., தன் மகன் போலத்தான் பாவித்தார், கோபம் கொண்டார், குட்டினார், தட்டிக் கொடுத்தார், தரம் உயர்த்தினார் என்று சொல்ல வேண்டும். ஜெயலலிதாவுக்கான அறைக்குள்ளே பர்ஷனல்  உதவிகளை சசி கண்ணசைவில் பெண் உதவியாளர் ஒருவர் செய்து முடிப்பார். ஆனால் அதிகாலையில் அலாரம் வைத்து, ஜெயலலிதாவுக்கு இண்டர்காமில் வணக்கம் சொல்லி, எழுப்புவதில் இருந்து, அவரது ப்ரோக்ராம், அறிக்கைகள், அமைச்சர்கள் அல்லது நிர்வாகிகளை அழைப்பது உள்ளிட்ட அத்தனை பணிகளையும் குறிப்பறிந்து நொடியில் முடிப்பது  பூங்குன்றன் தான்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் போயஸ் வீட்டில் ரெய்டு நடந்தபோது பூங்குன்றனின் அறை, கம்ப்யூட்டர், பென் டிரைவ்கள் பெரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. ஜெ.,வுக்குப் பின் சசி மற்றும் தினகரனின் பக்கமிருந்த பூங்குன்றன், சமீப சில மாதங்களாக எடப்பாடியாரின் அடிப்பொடியாகிவிட்டார். ஃபேஸ்புக்கில் பேய்த்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் பூங்குன்றன், வெளிநாடு சென்று திரும்பிய இ.பி.எஸ்.ஸை வரவேற்றுப் போட்ட பதிவு ஜால்ரா வரலாற்றில்  உச்ச பதிவு! என்று கிண்டலடிக்கின்றனர் தினகரன் கட்சியினர். 

தமிழக அரசியல் அரங்கில் சிங்கம் போல் கர்ஜித்துவிட்டு, உண்மையில் யார் கண்ணு பட்டதாலேயோ தளர்ந்து முடங்கியிருக்கிறார் விஜயகாந்த். கடந்த சில காலமாக பிரேமலதாவை தாண்டி விஜயகாந்துக்கு எல்லாமுமாக இருப்பவர் அவரது உதவியாளர் சின்னகுமார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது விஜயகாந்த் நடத்திய சில மணி நேர பிரசார மேளாவிற்கு அவரை தயார் படுத்தியதும், பேசும் பாயிண்டுகளை எடுத்துக் கொடுத்ததும் இவரே. சமீபத்தில் திருப்பூரில் தே.மு.தி.க. விழா மேடையில் விஜயகாந்தின் நிழலாக அமர்ந்தும், அவர் பேசுகையில் தளர்ந்துவிடாமல் தாங்கியும், அவருக்கு பயிற்சியளிக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்துக் கொடுத்துமாக தோள் கொடுத்தது இந்த இளைஞர்தான். விஜயகாந்த் குடும்பத்தை பொறுத்தவரையில் சேவையில் ‘பெரிய’குமார்தான் இந்த சின்னகுமார். ஏதோ ஜூனியர் ஆர்டிஸ்ட் போலிருக்கும் இந்த நபரை நம்பித்தான் விஜயகாந்தின் வண்டி ஃபர்ஸ்ட் கியர் போட்டுள்ளது மீண்டும்.