உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக அரசிற்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

உள்ளாட்சி தேர்தல் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம்  அதிரடியாக உத்தரவிட்டது. 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி உள்ளனர். நேற்று சென்னையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரத்தில் உன்ன சின்னையன் சத்திரம் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார். மேலும், அதிமுகவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம்தான் உள்ளனர்.

 ‛நீட்' போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆட்சியை அகற்ற வேண்டும் என 7 மாதங்களாக ஸ்டாலின் கூறி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்து 7 மாதங்களான நிலையில், ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை, நிறைவேற்ற அவரது வழியில் பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, அதிமுக எம்.பிகளுக்கு பதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக எம்.பி.களுக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலின்போது, பாஜகவுடன் கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.