உழைப்பவர்களுக்கே அதிமுகவில் முன்னுரிமை கொடுக்கப்படும், இதில் சீனியர் ஜூனியர் என்ற பாரபட்சம் கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுகவில் பதவிப் போட்டி நிலவி வரும் நிலையில் அவரின் இக் கருத்து அதிகம் கவனம் பெற்றுள்ளது.

மதுரை மேற்கு தொகுதி துவரிமானில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ஆழ்துளை கிணறு, சுகாதார வளாகம், ஆகியவற்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:  அம்மாவின் அரசு கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. 

அறிவித்த திட்டங்களை விட கூடுதலான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அம்மா அரசின் திட்டங்களை மக்களுக்கு நாள்தோறும் கூறி வருகிறோம். ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, பயோ மெட்ரிக் பதிவு சர்வர் பிரச்சினை வந்தால் பிற ஆவணங்களை கொண்டு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் பதிவை காரணம் காட்டி பொருட்கள் விநியோகத்தை நிறுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுகவை மக்கள் யாரும் விரும்பவில்லை, ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக மக்கள் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள், ஏனென்றால் திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரக்கூடாது, அப்படி வந்தால் நாடு சின்னாபின்னமாகி விடும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் கருதுகின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் வரை ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக  அறிவிக்கவில்லை என்று மக்களுக்கு நன்றாக தெரியும். 

எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் முதல்வர் பதவியை ஸ்டாலின் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது.  2021 சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தது ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களின் எண்ணமாகும், வழிகாட்டுதல் குழுவில் ஜூனியர் சீனியர் என்பது கிடையாது, கழகத்தின் உழைப்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அம்மா அரசிற்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். நிச்சயம் மூன்றாவது முறையும் கழகம் ஆட்சி அமைப்பது உறுதி என செல்லூர் ராஜு கூறினார்.