விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என மஜக பொதுச்செயலளார் முதமிமுன்அன்சாரி MLA வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கைவாயிலாக அவர் தெரிவித்துள்ளதாவது: சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களும், விவசாயிகளின் வாழ்வுரிமைகளுக்கு எதிராக இருப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. 

இதை எதிர்த்து நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டம் நடத்தின.தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஒரு வார கால தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் நாடு தழுவிய அளவில் விவசாய சங்கங்கள் ஒன்று சேர்ந்து தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு தற்போது  போராட்டம் நடத்தி வருவது நாடெங்கிலும் ஆதரவை பெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

மத்திய அரசு இப்போராட்டத்தில் பங்கேற்று வரும் விவசாயிகளின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, அவர்கள் கூறும் திருத்தங்களை ஏற்று, இச்சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.விவசாயிகளின் அறவழி போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். என அதில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.