மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை அமைக்கவே  கொரோனா தொற்று பரவலை மத்திய அரசு மறைத்தது என திமுக எம்.பி., தயாநிதி மாறன் குற்றச்சாட்டியுள்ளார்.

கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து தயாநிதிமாறன் தொடர்ந்து மத்திய அரசையும், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.  இந்நிலையில், திமுக சார்பில்  ஏழை எளிய மக்களுக்கு கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை தயாநிதி மாறன் விநியோகித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’முதல்வர் கூட்டம் நடத்துகிறார். தலைமை செயலாளர் மத தலைவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள். அதற்கெல்லாம் அனுமதி இருக்கும் போது, திமுக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மட்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தனி நபர் இடைவெளி பின்பற்றி நடத்தும் கூட்டத்துக்கு, ஜனநாயகத்துக்கு விரோதமாக அனுமதி மறுக்கப்பட்டள்ளது. நாங்கள் என்ன தீவிரவாத இயக்கமா? ஊரடங்கு 40 நாட்களுக்கு நீட்டிகப்பட்டு உள்ளது. எனவே, அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் நிதி உதவி அளிக்க வேண்டும். இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 80% ஊதியத்தை வழங்க வேண்டும்.

கொரோனா நோய் சோதனை குறைவாக செய்யப்படுகிறது. அதை அதிகமாக செய்தால்தான் எந்த நிலையில் கொரோனா உள்ளது என்ற உண்மை தெரியும். பிரதமர் எவ்வளவு வீரவசனம் பேசினாலும், இந்தியா ஒரு ஏழை நாடுதான். மக்களிடம் பணமே இல்லாத போது மக்களிடம் நிவாரணம் கேட்கிறார்.

இலவசமாக முக கவசம் வழங்குவதை விட்டுவிட்டு முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பது நியாயமில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியியை எடுத்துக் கொண்டார்கள். மருத்துவ உபரணங்கள் கூட விநியோகிக்க இப்போது உறுப்பினர்களால் முடியாது. ஆனால், பிக்பாஸ் நடுவர் போல பிரதமர் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் சங்கியும், மங்கியும் செய்து கொண்டிருக்கின்றனர். 

அறிவிப்புகள் பெரிதாக இருக்கிறது. ஆனால், நடைமுறை பூஜ்யம்தான். டிரம்ப் இந்தியா வந்த போதே இந்தியாவில் நோய் உச்சத்தில் இருந்தது .ம.பி., யில் ஆட்சியமைப்பதற்காக கொரோனா நோயை மறைத்து விட்டது மத்திய அரசு. அதற்குத்தான் இப்போது பிரதமர் மன்னிப்பு கேட்கிறார் போல’’ என அவர் தெரிவித்துள்ளார்.

நாடே கொரோனா தொற்றால் பதற்றத்தில் இருக்கும் நிலையில், ம.பியில் ஆட்சியமைப்பதற்காக இந்தியாவுக்குள் கொரோனோ தொற்றை கண்டுகொள்ளாமல் இருப்பதாக பாஜக ஆட்சி மீது அவர் குறை சொல்லி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.