The cause of the riot is the evil forces - Minister Kadambur Raju

தூத்துக்குடி போராட்டத்தில் தீய சக்திகள், சமூக விரோத சக்திகள் மக்களிடையே புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு பற்றி, தமிழக முதலமைச்சர் இதுவரை தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்காதது ஏன்? என்றும், பாதிக்கப்பட்ட மக்களக்கு ஆறுதல் கூறாதது ஏன் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தூத்துக்குடியில் தற்போது 144 தடை உத்தரவு உள்ளதால், தான் சட்டத்தை மதித்து அங்கு செல்லவில்லை என்று முதலமைச்சர் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி இருந்தது. இந்த நிலையில், நாளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தூத்துக்குடி செல்ல உள்ளார். ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று தூத்துக்குடி சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜு, மருத்துவமனை சென்று அனைவரையும் பார்த்தோம். துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்டவர்களையும் தடியடியில் பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்தோம் என்றார்.

தூத்துக்குடியில் குடிநீர், பால் தட்டுப்பாடு நீக்கப்பட்டு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் ரத்து
செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம், குடிநீர் வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் ஆலை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது குறித்து அரசாணை வெளியிடப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஆலை தொடர்ந்து இயங்க
வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். அதேபோல், தமிழக அரசும் ஆலையின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று மனு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகு, இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்றார். ஆலை இயங்கக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 98 நாட்கள் போராட்டம் அமைதியாகத்தான் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு அரசும் அனுமதி அளித்திருந்தது. தூத்துக்குடி மக்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் அரசு அனுமதி அளித்தது. மக்களின் உணர்வோடு அரசு இருப்பதாலதான், அவர்களின் போராட்டத்துக்கு அரசு அனுமதி அளித்தது. அது மட்டுமல்லாமல் காவல் துறையின் பாதுகாப்பும் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டது என்றார். குமரெட்டியாபுரத்தில் மக்கள் அமைதியாக போராடுவதற்கு அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. 144 தடை உத்தரவை மீறி ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டக்காரர்கள் வந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அப்போது சமூகவிரோத சக்திகள் மக்களிடையே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்றார்.

தூத்துக்குடியில் தற்போது அரசு பேருந்துகளைப் போல தனியார் பேருந்துகளும் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. முடக்கப்பட்ட இணையதளசேவை இன்று இரவுபோடு முடிவுக்கு வரும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு வேலை வழங்கவும் அரசு தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.