The case against Director Chandrasekhar
திருப்பதி கோயிலுக்கு காணிக்கை செலுத்துவது லஞ்சம் என்று கூறிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை, விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சென்னையில் பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திருப்பதி கோயிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என கூறியிருந்தார்.
இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிகக்
வேண்டும் என்று கடந்த 16 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை, விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற மதத்தினரின் உணர்வுகளை உள்நோக்கத்துடன் புண்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதால் ஐ.பி.சி. 295 ஏ என்ற பிரிவின்கீழ் சந்திரசேகர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கிறிஸ்தவரான சந்திரசேகர், இந்து நம்பிக்கைகளை புண்படுத்தி விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
