The bribe to get a double leaf symbol - Dinakaran who has been waiting for 3 days to appear in person.
இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த சம்மனை டெல்லி போலீசார் நேற்று தினகரனிடம் வழங்கினர்.
இந்நிலையில், நேரில் ஆஜராக 3 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார் டிடிவி தினகரன்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் உச்ச கட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. அதுவும் அதிமுகவில் சொல்லவே தேவையில்லை. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என அனைவரும் பதவிக்கு ஆசைப்பட்டு பல புகார்களில் சிக்கி வருகின்றனர்.
கடந்த 17 ஆம் தேதி அதிகாலை டெல்லியில் சுகேஷ் சந்திரா என்ற நபர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.
இதற்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். உரிய ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் டிடிவி தினகரன் எப்போது வேண்டுமேனாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவும், டிடிவி தினகரனும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடலை கைப்பற்றி உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், டிடிவி தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களுடன் கைதான சுகேஷ் சந்திரசேகரையும் நீதிபதி அனுமதியுடன் அழைத்து வந்துள்ளனர்.
இருவரையும் ஒன்றாக வைத்து விசாரணை மேற்கொள்ள டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளது.
டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஸ்ரவத் தலைமையில் சென்னை வந்த போலீசார் நேற்று டிடிவி தினகரனை சந்தித்து சம்மன் வழங்கினர். அதில் நாளை மறுநாள் டெல்லி போலீசார் முன் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடபட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லி காவல்துறை முன் ஆஜராக 3 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார் டிடிவி தினகரன். தினகரன் கேட்ட அவகாசத்தை டெல்லி போலீசார் ஏற்பார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
