கர்நாடகத்தில் கல் குவாரியில் நேரிட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் சிவ்மோகா மாவட்டத்தின் ஹுனசோடு பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகள் உடைக்கும் இடத்தில் ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ''எனது மகனும், எம்.பி.யுமான ராகவேந்திரா அதிகாரிகளுடன் சென்று விபத்து நேரிட்ட இடத்தை பார்வைட்டார். சுரங்கத் துறை அமைச்சரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நானும் நேரில் சென்று விபத்து நேரிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளேன். 

இது போன்ற அசம்பாவிதங்கள் மேலும் நடக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். முறைகேடாக பாறைகளை வெட்டி எடுப்பது தடுக்கப்படும். ஏற்கெனவே முறைகேடாக செயல்படும் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இனி இதுபோன்ற சம்பவங்களும் நிகழாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.