Asianet News TamilAsianet News Tamil

திமுக அரசை பார்த்து பாஜக அலறுகிறது.. மக்களின் எதிர்ப்பைதான் பாஜக சம்பாதிக்கும். கொதிக்கும் கொங்கு ஈஸ்வரன்.

தமிழக அரசு எந்த விஷயத்தை ஆராய குழு அமைத்தாலும் தமிழக பாஜக எதிர்க்குமா.? ஆட்சி பீடத்திலிருந்து மக்களால் இறக்கப்பட்ட அதிமுக அரசு போல திமுக அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய பேச்சை கேட்டு நடக்கும் என்று இவர்கள் எதிர்பார்த்தால் அது பகல் கனவாக போகும். 

The BJP is screaming at the DMK government .. The BJP will earn the opposition of the people. Boiling Kongu Eeswaran.
Author
Chennai, First Published Jun 29, 2021, 1:11 PM IST

தமிழக அரசு நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய ஜனநாயக முறைப்படி அமைத்த குழுவை செல்லாது என்று பாஜக வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு :- 

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது. தமிழக மக்களின்  பல்வேறு தரப்பட்ட கருத்துகளை இக்குழு ஆராய்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று இக்குழு தலைவர் கூறியிருந்தார். ஆனால் தமிழக பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய குழு அமைத்து  தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கு தொடுத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாநில அரசான தமிழக அரசு ஆராய்வது தமிழக அரசின் உரிமை. 

அதை எதிர்த்து தமிழக பாஜக வழக்கு தொடுப்பது மாநில சுயாட்சிக்கு விடுக்கப்படும் சவாலாக பார்க்கப்படுகிறது. மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தினுடைய முதலமைச்சராக இருந்த போது மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்தவர்தான். தமிழக அரசு எந்த விஷயத்தை ஆராய குழு அமைத்தாலும் தமிழக பாஜக எதிர்க்குமா.? ஆட்சி பீடத்திலிருந்து மக்களால் இறக்கப்பட்ட அதிமுக அரசு போல திமுக அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய பேச்சை கேட்டு நடக்கும் என்று இவர்கள் எதிர்பார்த்தால் அது பகல் கனவாக போகும். தமிழகத்தில் இருக்கின்ற பாஜக தலைவர்கள் தமிழக அரசையும், தமிழக மக்களையும், தமிழ் மொழியையும் மதிக்க வேண்டும். டெல்லியிலே ஆட்சி நடத்துகிறோம் என்பதற்காக ஒன்றிய அரசை கொண்டு மாநில அரசை கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தால் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு தான் வலுக்கும். 

இதிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீட் தேர்வு தாக்கத்தை ஆராய்வதற்கு போடப்பட்ட குழு மற்றும் தமிழக அரசினுடைய செயல்பாடுகளை பார்த்து நீட் தேர்வு விஷயத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு பயம் வந்திருப்பதை உணர முடிகிறது. மக்கள் எதிர்ப்பு இருக்கின்ற ஒரு கொள்கை முடிவுக்கு ஜனநாயக ரீதியாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை போட்டு ஆய்வு செய்ய வேண்டுமென்று பரந்த மனப்பான்மையோடு முடிவு எடுத்த தமிழக அரசின் நடவடிக்கைகள் மீது என்ன தவறை கண்டார்கள். மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் மாநில அரசின் முடிவுகளை தமிழக பாஜக எதிர்க்கிறதா ?. தமிழக அரசு குழு அமைத்து ஆராய்வதை கூட தமிழக பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா ?. ஒன்றிய அரசு தமிழக பாஜகவை வைத்து மாநில சுயாட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை நிலைநிறுத்த பார்க்கிறதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios