அதிமுக கூட்டணியில் எந்தெந்த தொகுதி யாருக்கு ஒதுக்குவது என்பதில் இழிபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை தொகுதியை கேட்டு பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே பிரளயமே நடந்து வருகிறது.

திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிந்து யார் யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக கேட்கும் தொகுதியில் சிவகங்கை தொகுதியும் ஒன்று. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் சிவகங்கையில் பி.ஆர்.செந்தில்நாதன் வெற்றிபெற்றார். அதே தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய ஹெச்.ராஜா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மீண்டும் ஹெச்.ராஜாவுக்காக பாஜக சிவகங்கை தொகுதியை கேட்டு வருகிறது. 

இதனையறிந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பாஸ்கரன் தனது மகன் கருணாகரனுக்காகவும், தற்போதைய எம்.பி. செந்தில்நாதன் தனக்காகவும் இந்தத் தொகுதியை கைப்பற்றுவதில் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்காக அவர்கள் இருவரும்  தங்களது ஆதரவாளர்களுடன் சென்னையில் முகாமிட்டு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதிமுக மேலிடம் சிவகங்கையை கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியிருப்பதாகக் கூறி கைவிரித்து விட்டது.

 

அப்போது அமைச்சரும், எம்.பி தரப்பினரும், ’’ஹெச்.ராஜாவுக்கு ஏற்கெனவே தமிழகம் முழுவதும் எதிர்ப்பு இருந்து வருகிறது. சிவகங்கை தொகுதியை அவருக்கு ஒதுக்கினால் டெபாசிட் கூட கிடைக்காது’’ எனக் கொதித்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்திய அதிமுக தலைமை எச்.ராஜா போட்டியிடப்போவதால், சிவகங்கை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்குமாறு டெல்லி பாஜக மேலிடமே நேரடியாக கேட்டுக்கொண்டுள்ளது. ஆகையால் வேறு வழி தெரியவில்லை. அதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் நீங்கள் கேட்கும் தொகுதியை தருகிறோம் என சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளது.