திமுக வளர்ச்சிக்கும், முடிதிருத்தகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை நிருபித்திருக்கிறார் மதுரை அருகே உள்ள விளாச்சேரியில் உள்ள முடிதிருத்தகம் கடைக்காரர் துரைப்பாண்டி. ஒருங்கிணைவோம் வா' நிகழ்வின் மூலம் ஏழ்மையில் இருக்கும் இவருக்கு.." முடிதிருத்துவதற்கான கருவிகளை வழங்கி அவரை கவுரப்படுத்தியிருக்கிறார் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர்.சரவணன்.

திமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் சமீப காலமாக ஆர்.எஸ். பாரதி, தயாநிதிமாறன் போன்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்களையும், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் முடிதிருத்துபவர் சமூகத்தையும் இழிவாக பேசினார் என்று தமிழக அரசியலில் பலத்த சர்ச்சைகளையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முடிதிருத்தும் நிலையங்கள் எல்லாம் முரசொலி படிப்பகமாக விளங்கியதை யாராலும் மறுக்க முடியாது. திராவிட இயக்கம் வளர்ந்ததே முடிதிருத்தகம், டீகடைகள், சலவைநிலையங்கள் போன்ற இடங்களில் தான்.  ஏன் திமுக இளைஞர் அணி உருவானதே முடிதிருத்தம் கடையில் தான் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் பல முறை சொல்லியிருக்கிறார். கலைஞர், இராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு சென்று  பொதுக்கூட்டத்தில் பேச வேண்டும். அதற்காக 1964-65ம் ஆண்டு காலகட்டத்தில் எல்லாம் பஸ் போக்குவரத்து அவ்வளவாக கிடையாது. மதுரையில் இருந்து ரயில் மூலம்; மானாமதுரை வந்து இறங்கி மானாமதுரையில் இருந்து கமுதிக்கு பஸ்சில் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் தான் கலைஞர் கமுதி செல்வதற்காக திமுக கட்சிக்காரரான சேது முடிதிருத்தம் செய்யும் கடைக்கு வந்து அங்கு இருந்து நிதி பெற்று சென்றாக ஒரு வரலாறு இருப்பதாக சொல்லுகிறார்கள் மானாமதுரையைச் சேர்ந்த திமுக உடன் பிறப்புக்கள். 

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சலைவைத் தொழில் செய்து வந்தவர் கி.வ. முனியாண்டி. இவர் அந்த பகுதியில் தேர்தல் நேரங்களில் உதயசூரியன் சின்னத்தை சுவர்களில் வரைவதற்காக தன் மனைவியின் நகைகளை விற்று பெயிண்ட் மூலம் அந்த சின்னத்தை வரைந்திருக்கிறார். இதைக்கேள்விப்பட்ட கலைஞர் முனியாண்டியை அழைத்து கவுரப்படுத்தியதோடு தன் காவலாளியிடம் முனியாண்டி என்னை சந்திக்க எப்போது வேண்டுமானாலும் வரலாம்.அவரை தடுத்து நிறுத்தக்கூடாது என்று உத்தரவு போட்டாராம் கலைஞர்.

ஆக உள்ளுர் அரசியல் முதல் உலக அரசியல் வரைக்கும் இதுபோன்ற இடங்களில் தான் விவாதிக்கப்படும். தேர்தல் நேரங்களில் இங்கே எதிரொலிக்கும் கருத்துக்கணிப்புகள் கச்சிதமாக வெளிவரும். அந்த அளவிற்கு விவாதிக்க கூடிய இடம் முடிதிருத்தகம்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு என்ற சின்னையா.இவர் 62 ஆண்டு காலமாக திமுகவின் முரட்டு தொண்டராக இருந்திருக்கிறார். திமுக கழகம் அடிமட்ட தொண்டர்களால் வளர்ந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு இவரைப்போன்றார்கள் தான். தமிழ் மொழியையும், தமிழ்வரலாற்றையும், திராவிடக்கழத்தின் வரலாற்றையும் மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும், படிக்க வேண்டும் என்று தன்னுடைய முடிதிருத்தகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை முரசொலி படிக்க வைத்தவர் சின்னையா.


சின்னையா மகன் துரைப்பாண்டியிடம் பேசும் போது..
  "1960 காலங்களில் முரசொலி பத்திரிகையை படிப்பதற்கு எங்கள் கிராம பொதுமக்களும்,திமுக தொண்டர்களும் எங்க முடித்திருத்தகம் கடைக்கு தான் தேடி வருவாங்க.என் அப்பாவுக்கு 82 வயது.முதுமையின் காரணமாக உடல் நலம் சரியில்லாமல் இறந்து போனார். நான் எட்டாவது மட்டுமே படித்திருந்திருந்தேன்.  அப்பா விட்டுச்சென்ற தொழிலை விடாமல் நடத்த வேண்டும். அவர் வழங்கி வந்த திராவிடபற்று. மக்களுக்கு முரசொலி பத்திரிகை வழங்கும் செய்தியை இன்று வரைக்கும் கொடுத்து வருகிறேன்.
 1967ம் ஆண்டு முதல் இன்று வரைக்கும் உள்ள முரசொலி பத்திரிகையை பாதுகாத்து வருகிறேன். இன்றைக்கும் பழைய செய்திகளை பார்க்க படிக்க எங்க கடைக்கு திமுகவினர் மட்டுமல்லாது வெளியாட்கள் கூட தேடி படித்தும் போட்டோ எடுத்தும் செல்கிறார்கள்.


கொரோனா ஒன்றினைவோம் நிகழ்ச்சி மூலம் தனக்கு முடிதிருத்தும் கருவிகள் வழங்க வேண்டி திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணனிடம் மனு கொடுத்திருந்தேன். அதான் எம்எல்ஏ டாக்டர். சரவணன் என் தொழிலுக்கு தேவையான கருவிகளை என் கடைக்கே வந்து வழங்கியது பெருமையாக உள்ளது. அவரிடம் என் கடையில் பாதுகாத்து வரும் முரசொலி பத்திரிகைகள் அனைத்தையும் காட்டினேன். அவரும் பார்த்தார். உங்களை போன்றவர்களுக்கும் திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கிருந்து தான் திமுக வளர்ந்தது என்று பெருமையாக பேசியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.என் பேரன்கள் இரண்டு பேருக்கும் காது கேட்காது.அவனுங்களுக்கு காதுகேட்குற மிசின் தாருவதாக சொல்லியிருக்கிறார் என்றார்.