தூத்துக்குடி: பாசிச பாஜக ஆட்சி ஒழிக என தமிழிசை சவுந்தரராஜனை நோக்கி முழக்கமிட்டு சர்ச்சையில் சிக்கிய ஆராய்ச்சி மாணவி சோபியா படுதீவிரமான ஸ்டெர்லைட் எதிர்ப்பாளராக இருந்துள்ளார்.

தூத்துக்குடி சோபியாவுக்கு பின்னால் ஒரு இயக்கம் இருக்கிறது என்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். சோபியா ஒரு விடுதலைப் புலி என்கிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.

கனடாவில் கணிதம் தொடர்பான ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் சோபியா மிகக் கடுமையான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி. தி வயர் எனும் இணையதளத்தில் சோபியா ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமங்களுக்கு எதிராக காத்திரமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதியன்று “As Sterlite Plant Expands, a City Erupts in Protest” என்ற தலைப்பில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையின் தொடக்கமே, துப்பாக்கி கலாசார வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்காவின் வாசிங்டனில் மார்ச் 24-ந் தேதியன்று அனைவரும் ஒன்று கூடிய அதே நேரத்தில் தென் தமிழ்நாட்டின் தூத்துக்குடி வீதிகளில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி மிகப் பெரும் மக்கள் எழுச்சி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என பதிவு செய்கிறார்.

அந்த கட்டுரை மேம்போக்கானதாக இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சோபியாவை மேலும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி “Yes, Mr Anil Agarwal, Business Does Need to be Kept Away From Politics” என்ற தலைப்பில் சோபியா தி வயர் இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறார்.

அத்துடன் ஒடிஷாவின் நியாம்கிரியில் மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட வேதாந்தா குழுமத்துக்கு எதிரான போராட்டத்தை சுட்டிக்காட்டியுள்ளார் சோபியா. தூத்துக்குடியோ, நியாம்கிரியோ போராடும் மக்களின் குரல்களை ஒடுக்குவதில்தான் எப்போதும் வேதாந்தா குழுமம் முனைப்புடன் இருக்கிறது எனவும் சாடியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நெல்லை மருத்துவ கல்லூரி கம்யூனிட்டி மெடிசன் துறை 2008-ம் ஆண்டு வெளியிட்ட 121 பக்க அறிக்கையின் லிங்கையும் இணைத்துள்ளார்.

பொதுவாக படுதீவிர ஸ்டெர்லைட் எதிர்ப்பாளராக அதாவது சோபியாவின் நாடி நரம்புகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஊறிப் போன ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது என்பதையே அவரது கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.