‘முதல்வர் பேசுவது வெறும் வாய்ச்சவடால்! என்பதை கஜா புயல் அம்பலப்படுத்திவிட்டது. பரிதவிக்கும் மக்களை சந்திக்க முதல்வருக்கு நேரமும் இல்லை, மனதும் இல்லை. முதல்வருக்கு இருப்பது இதயமா, இரும்பா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பெரிய பள்ளம் மட்டுமே உள்ளதா?’....இப்படி போட்டுப்  புரட்டி இருப்பது வேறு யாருமல்ல ஸ்டாலின் தான். தமிழக முதல்வ எடப்பாடி பழனிசாமியைதான் இப்படி வார்த்தைக்கு வார்த்தை விளாசி தள்ளியிருக்கிறார் ஸ்டாலின். 

கஜா புயலின் பாதிப்பு அரசாங்கம் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருக்கிறது! என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே வெளிப்படையாக சொல்லிவிட்டார். புயலினால் ஏற்பட்ட உயிர் பலி எண்ணிக்கை 45! ஒரு லட்சத்து பதினேழாயிரத்து அறுநூற்று எழுபத்து நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன! என்று சேலம் சுற்றுப்பயணத்தில் முதல்வர் பழனிசாமியும் சொல்லிவிட்டார். ‘சேதம் மிக அசாதாரணமானது. எனவே புணரமைப்பு பணிகள் மிக மிக சவாலானது.’ என்று அரசு அதிகாரிகளே நொந்து சொல்லிவிட்டனர். 

ஆக சூழ்நிலைகள் இவ்வளவு மோசமாக இருந்தும் கூட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இப்போது வரை முதல்வர் செல்லவில்லை. தன் சொந்த மாவட்டமான சேலத்தில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் செய்பவர், 20-ம் தேதிதான் புயல் பாதித்த பகுதிகளுக்கு செல்ல இருப்பதாக கூறியுள்ளார். இதுதான் பிரச்னையையும், விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. 

ஸ்டாலின் ’உள்ளமா? பெரும் பள்ளமா? என்று தாளித்து எடுத்து விமர்சனம் செய்யுமளவுக்கு முதல்வர் இப்படி அங்கு செல்லாமல் காலம் கடத்துவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? என்று அரசியல் பார்வையாளர்கள் ஆளாளுக்கு பிரித்துப் போட்டு அலசலை நடத்துகின்றனர். 
அதில் சிலர் “வெள்ளம் பாதித்த பகுதிகளை உடனே முதல்வர் சென்று பார்க்காதது சென்டிமெண்டினால்தான்! இரண்டு வருடங்களுக்கு முன் கன்னியாகுமரியில் மீனவர்கள் இப்படி சின்னாபின்னமான போதும் முதல்வர் அங்கு செல்லவில்லை. எட்டி நின்றே எல்லா சம்பிரதாயங்களையும் முடித்தார். இப்போது நாகை விஷயத்திலும் இதையே செய்கிறார். 

அப்படியானால் இதற்கு அடிப்படை காரணம் சென்டிமெண்டுதான். ஜெயலலிதா போல், நல்ல நேரம்! எமகண்டம்! சூலம்! சந்திராஷ்டமம்! அஷ்டமி நவமி! என ஜோஸியம் பார்த்து எதையும் செய்வதில் எடப்பாடியாரும் அதீத ஆர்வமுடையவர். அவரிடம் அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் ‘தண்ணீர் பாதித்த  பகுதிகளை உடனே பார்வையிடுவது உங்களுக்கு நல்லதில்லை.’ அப்படின்னு அட்வைஸ் பண்ணியிருக்காங்கன்னு புரியுது. அதனாலதான் இவ்வளவு தயங்குறார், தவிர்க்கிறார், தள்ளிப்போடுறார். முதல்வர் தனக்கு தண்ணீரில் கண்டமிருக்கிறதா நினைக்கிறார்ங்கிறது தெளிவா புரியுது.” என்று அள்ளிவிடுகிறார்கள்.

 

சிலர் இந்த விமர்சன கோணத்தை சீரியஸாக பார்க்க, பலரோ சிரிக்கிறார்கள். அதேவேளையில் “பெரிதும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஆத்திரத்தில் இருக்கும் மக்கள் முற்றுகை, கண்டனக்குரல், எதிர்ப்பு பேச்சு, சாபம்” என்று எதிர்மறை விஷயங்களில் இறங்கினால் தனக்கு பெரும் அவமரியாதையாக போய்விடும் என்று எடப்பாடியார் நினைப்பதும் இந்த தாமதத்துக்கு காரணம் என்கிறார்கள். எது எப்படியோ சீக்கிரமா அங்கே போய் நின்று அவஸ்தைப்படும் மக்களுக்கு ஆறுதல் சொல்லுங்க சி.எம். சார்!