திமுக சார்பில் இன்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்காமல் கமல் பின்வாங்கியதற்கான பரபரப்பு காரணம் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் கமலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஸ்டாலின், திமுக சார்பில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மறுநாள் சென்னை பல்கலைக்கழகத்தில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களை நேரில் சென்று சந்தித்தார் கமல். அதன் பிறக பேசிய கமல், சென்னையில் திமுக சார்பில் நடைபெறும் பேரணியில் தான் கலந்து கொள்ள உள்ளதாக கூறியிருந்தார்.

அத்துடன் திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ். பாரதி தலைமையில் கமலை சந்தித்து பேரணிக்கு வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தனர். இதனால் கமல் – ஸ்டாலின் என புதிய கூட்டணி உருவாதற்கான சூழல் தமிழக அரசியலில் உருவானது. கமல் மற்றும் ஸ்டாலினுடன் தொடர்பில் உள்ள பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தின் அடிப்படையில் தான் இருவரும் அரசியலில் இணைந்து செயல்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

ரஜினி தலைமையில் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைவதை தடுக்கும் வியூகமாகவும் கமலை தற்போதே திமுக வளைத்துவிட்டதாகவும் பேச்சுகள் எழுந்தன. ஆனால் திடீரென திமுக பேரணியில் பங்கேற்கப்போவதில்லை என்று கமல் பின்வாங்கிவிட்டார். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக கமல் வெளிநாடு செல்வதாகவும் மக்கள் நீதி மய்யம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சரி கமல் தான் வெளிநாடு செல்கிறார் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கமல் கட்சி நிர்வாகிகளாவது திமுகபேரணியில் கலந்து கொள்ளலாம் அல்லவா?

ஆனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரும் இந்த பேரணியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துவிட்டனர். இதற்கு மிக முக்கிய காரணமே வசூல் தான் என்கிறார்கள். தற்போதைய சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சி முழுக்க முழுக்க நன்கொடையாளர்கள் வழங்கும் நிதி மூலமாகவே இயங்கி வருவதாக சொல்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறக கமல் கட்சிக்கு நன்கொடை அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் திமுக – அதிமுகவிற்கு மாற்றாக கமல் இருக்கிறார் என்கிற நம்பிக்கையில் நடுநிலை நன்கொடையாளர்கள் வழங்கும் நிதி தான் என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் எதற்காக திமுகவுடன் இணைந்து பேரணியில் கலந்து கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று சில ஆலோசனைகள் வந்ததன் விளைவே கமல் பின்வாங்கியதற்கு உண்மையான காரணம் என்கிறார்கள்.

கெஜ்ரிவால் டெல்லியில் கட்சி நடத்துவதே நன்கொடை மூலமாகத்தான். கடந்த 2013 தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்த நிலையில் நன்கொடை கணிசமாக குறைந்ததை கமலிடம் சிலர் எடுத்துக்கூறியதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.