ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா சீனாவுக்கு 72 மணி நேர கெடு விதித்திருந்த நிலையில்,  கெடு முடியும் வரை வெளியில் காத்திருந்த அமெரிக்க போலீசார், சீன தூதரகத்தின் கதவுகளை உடைத்து, உள்ளே நுழைந்து ஆய்வில் ஈடுபட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏராளமான ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ஆய்வில் ஈடுபட்டபோது, உள்ளே பதுங்கியிருந்த சீன உளவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் அதிகரித்துள்ளது, கொரோனா வைரஸ் விவகாரம், இரு நாட்டுக்கும் இடையே வர்த்தகத்தில் நீடித்து வரும் பனிப்போர், ஹாங்காங் சிறப்பு சட்டம், தென்சீனக்கடல் விவகாரம், இந்திய-சீன எல்லை மோதல், தைவானில் தலையீடு என பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்திற்குப் பின்னர் இந்த மோதல் பகையாக மாறியுள்ள நிலையில்,  இருநாடுகளும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. 

அதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் அறிவுசார் வளங்களை சீனா திருடுவதாகவும், அமெரிக்காவை  சீனா உளவு பார்ப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் குற்றஞ்சாட்டினர். இதனால் இரு நாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திடீரென சீனா தனது ஹூஸ்டன் தூதரகத்தை மூடவேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டது. அதேபோல் டெக்ஸாஸில் உள்ள தூதரகத்தையும் மூட வேண்டுமென அமெரிக்கா கண்டிப்பு காட்டியது, அதுமட்டுமல்லாமல் ஹூஸ்டன் தூதரகத்தை மூட 72 மணி நேரம் கெடு விதித்தது, இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ததுடன், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக செங்டுவில்  உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு  உத்தரவிட்டது. இந்நிலையில் ஹூஸ்டனில் தூதரகத்தை காலி செய்ய சீனாவுக்கு அமெரிக்கா விதித்த கெடு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைந்தது,  தூதரகத்தை விட்டு சீனா வெளியேற வேண்டுமென அமெரிக்கா உத்தரவிட்ட நாள் முதல், 

ஹூஸ்டன் தூதரகத்திற்கு வெளியே எப்பிஐ அதிகாரிகள், மற்றும் உள்ளூர் போலீசார், கண்காணிப்பு பணியில் நிறுத்தப்பட்டனர், அவர்கள் அடுத்த 72 மணி  நேரமாக தூதரக நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தனர். இந்நிலையில் கெடு முடிவடைந்த நிலையில் சீன தூதரகத்திற்குள் எப்பிஐ அதிகாரிகள்,  போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கூட்டாக உள்ளே நுழைந்தனர். ஆனால் கதவுகள் பூட்டப்பட்டு இருந்ததால், கதவுகளை உடைத்து உள்ளே நுழையும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தூதரகத்தில் மறைந்திருந்த சீன உளவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த  தகவல்களும் இல்லை, அங்கு பதுங்கி இருந்தவர் ஒரு பெண் உளவாளி என்றும் கூறப்பட்டது. அவர் நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வந்தார் எனவும், அமெரிக்காவின் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்ததாகவும், சீன தூதரகத்தை தகவல் தொடர்பு மையமாக பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ஹூஸ்டன் தூதரகத்துக்குள் ஆய்வு செய்ததில் எப்பிஐ முகவர்களுக்கு என்ன கிடைத்தது என்பது பற்றி எந்த தகவலும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் ஆய்வுக்கு பின்னர் சில பெட்டிகளுடன் அதிகாரிகள் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்காவில் குறைந்தது 25 நகரங்களில் சீனா உளவுத்துறை நெட்வொர்க் இயங்கி வந்தது. அதற்கு சீன தூதரகம் தலைமையகமாக செயல்பட்டு வந்தது, சீனத் தூதரகத்தில் உள்ள சிலர் அதற்கான விசாரணையை தவிர்க்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் அமெரிக்கா எவ்வளவு தொழில்நுட்ப ரீதியாக விசாரணைகளையும் நடத்துகிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. சீன தூதரக அலுவலகம் அமெரிக்கர்கள் நுழைய முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டை போல் இருந்ததாகவும், அது உளவு வேலைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் தகவல்தொடர்பு மையமாக இது செயல்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி சீனாவில் டிக் டாக் செயலி, சீன மொபைல் போன்றவற்றையும் தடைசெய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.