தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைமை அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பையும் பாஜக தலைமைதான் அறிவிக்கும்” என்று தமிழக பாஜக தலைவர்கள் பேசத் தொடங்கினர். மத்திய அமைச்சர்களும் இதே கருத்தை எதிரொலித்துவிட்டு சென்றனர்.
இந்த விவகாரத்தில் பாஜகவினருக்கு அதிமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் பதில் சொல்வதும், அதற்கு பாஜகவினர் பதில் சொல்வதும் என கூட்டணியில் குழப்பமே நிலவிவருகிறது. இந்த விவகாரத்தால் கடுப்பான அதிமுக துணை இருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை.  தேசிய கட்சிகள் அதிமுக அல்லது திமுக முதுகில்தான் சவாரி செய்தாக வேண்டும். தமிழகத்தில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் எப்போதும் போட்டி” என்று கூறினார்.


இந்நிலையில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எங்களை ஆதரிக்கிறார்கள். கே.பி.முனுசாமியின் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.” என்று தெரிவித்தார்.