அதிமுகவின் அணிகள் இணைப்பு என்பது ஏமாற்று வேலை என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாக பிளவுபட்டன. அதிமுக பொது செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ளார்.

கட்சி சின்னம் பெற அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், கட்சி பணியாற்ற போவதாக அறிவித்தார். அவர் விடுத்த கெடுவும் கடந்த 5 ஆம் தேதி முடிவடைந்தது. 

அதிமுக அம்மா அணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிகாரபோட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், கட்சி இணைப்பு குறித்து பேச்சு அதிகளவில் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், நதிகள் இணையலாம் என்றும் அதிமுக அணிகள் இணையாது என்றும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, நதிகள் இணையலாம் ஆனால் அதிமுக அணிகள் இணையாது என்றார். மேலும், அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேசப்படுபவை ஏமாற்று வேலை என்றும் புகழேந்தி கூறியுள்ளார்.