அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார். தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 386 இடங்களுக்கு 3,030 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில், கடலோர உள்நாட்டு மீனவர்களின் வாரிசுகளுக்கு 5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றார். 

மேலும் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், கடலில் காணாமல் போனவர்களின் வாரிசுகளுக்கு உள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், தமிழ்நாட்டின் உரிமைகளை ஆட்சியில் இருந்தபோது தாரைவார்த்து விட்டு, தேர்தல் நேரத்தில் திமுகவினர் மக்களை சந்திப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது என்றும், மக்களோடு மக்களாக இருக்கும் இயக்கமே அதிமுக என்றும், தேர்தல் வந்தால் மீண்டும் அதிமுகவை அரியணையில் ஏற்ற மக்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக செய்து வருவதாகவும்,  பிரசாந்த் கிஷோர் எழுதித் தரும் புதுப்புது தலைப்புகளில் என்ன செய்தாலும்  திமுகவால் தேர்தலில் சாதிக்க முடியாது என்றும், கனிமொழி உள்ளிட்டோர் இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரையில் பிரச்சாரம் செய்தாலும் அதிமுக கவலைப்படாது என்றும் கூறினார். 

மு.க.அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவுக்கே கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பேசிய ஜெயக்குமார், திமுகவில் கட்சியினருக்கு எந்த அளவுக்கு மதிப்பு வழங்கப்படுகிறது என்பதற்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதையே உதாரணம் என்றும் பேசினார். 

7 பேர் விடுதலைக்கு திமுக ஆட்சியில் இருந்த போது என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாகக் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள், அதிமுகவின் முடிவை ஏற்றுக்கொண்டே தீர வேண்டும் என்று பேசிய அமைச்சர், பாஜகவுடனான கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், அமித்ஷா வருகைக்கும் அதிமுக கூட்டத்துக்கும் தொடர்பில்லை என்றும் பேசினார். இறுதியாக சசிகலா விடுதலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  சசிகலாவின் விடுதலையை அதிமுக பொருட்படுத்தவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.