தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகளை புறக்கணிக்கும் வகையில், சட்டசபைக்குள் அதிமுக உறுப்பினர்கள் வராமல் வெளியில் காத்திருந்த சம்பவம் சட்ட மன்ற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
முதலாம் ஆண்டில் முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றார். இன்றோடு முதலாம் ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை வளாகம் வாழை மரங்களாவும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முதலாம் ஆண்டையொட்டி முதலமைச்சருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறுவதாக இருந்த கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய சட்டசபை கூட்டம் கூடியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளையும், கடந்த ஒரு ஆண்டில் திமுக அரசு செய்த சாதனைகளையும் பட்டியலிட்டார்.

புதிய அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓராண்டு காலத்தில் அனைத்தையும் சாதித்து விட்டேன் என்று நான் சொல்லிக் கொள்ள மாட்டேன் ஓராண்டு காலத்துக்குள் செய்யக்கூடியதை விட அதிகமாக செய்துவிட்டோம் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் என கூறினார். இன்னும் வேகமாக செல்ல முடியாததற்கு தடையாக இருப்பது நிதி நெருக்கடி, அரசாங்கத்தின் சில நிலைப்பாடுகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பல திட்டங்களைத் தீட்டி இருக்க முடியும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார், அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்படும், முதல் கட்டமாக சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமங்களில் காலை நேர சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டுள்ளது, படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையிலான புதிய திட்டம் தொடங்குப்படும் என தெரிவித்த முதலமைச்சர், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.

அவைக்குள் வராமல் காத்திருந்த அதிமுக
இது போன்ற பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுக்கொண்டிருந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்குள் வராமல் வெளியிலேயே காத்திருந்தனர். பெரும்பாலான உறுப்பினர் அதிமுகவினருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலும், சட்டசபை வளாகத்திலும் நின்று கொண்டிருந்தனர். முதலமைச்சர் உரை முடிவடைந்ததும் கூட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்குள் வரவில்லை, . அதிமுக உறுப்பினர்கள் முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை கேட்காமல் அவையை இன்றைய தினம் புறக்கணித்த சம்பவம் சட்ட சபை வளாகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
