மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதிமுக அரசு செயல்படுவதாக, திருவள்ளூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பஞ்செட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அரசியல் நாகரிகம் நிறைந்தவர் என்று புகழாரம் சூட்டினார். 

திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அதிமுகவின் ஆட்சிகளே காரணம் என்றார். திருவள்ளூர் மாவட்டம் தொழிற்சாலை மாவட்டமாக திகழ்கிறது. தொழிற்சாலை, கல்வி, மாவட்டமாக திகழ ஜெயலலிதாவே காரணம். 

மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதிமுக அரசு செயல்படுகிறது.  நாட்டிலேயே முதலீட்டை ஈர்ப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

உண்மை, உழைப்பு, ஆளுமை கொண்ட யார் வேண்டுமானாலும் உயர்ந்த நிலைக்கு வரலாம்.

இன்னும் பத்து ஆண்டுகளில், தமிழகம் விஞ்ஞானத்தில் சிறந்த மாநிலமாக திகழும். உணவு தானிய உற்பத்தியில் சாதனை பெற்றதற்காக விருது பெற்றது தமிழ்நாடு. கல்வித் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.