தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி ஆரம்பிக்கப்பட்ட பாமகவின் போராட்டம் பிசுபிசுத்து போய் விட்டது.

தமிழகத்தில் வன்னியர் சமூக மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வருகின்றனர். அந்த பட்டியலில் இருப்பவர்களுக்கு 20% இடஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அது தவிர வன்னியர்களுக்கு தனியே 20% இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து டிசம்பர் 1 தேதியிலிருந்து 4ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் இதற்கு பாமகவினர் திரண்டு வரவேண்டும் என்றும் பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
அவரது அழைப்பை ஏற்று டிசம்பர் 1ம் தேதி பல்வேறு இடங்களில் இருந்தும் பாமகவினர் தலைநகர் சென்னையை நோக்கி வந்தனர். அப்படி வந்தவர்களை சென்னையின் புறநகரான பெருங்களத்தூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆவேசமடைந்த பாமகவினர் சென்னைக்கு வரும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி அங்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலையும் கல் எறிந்து நிறுத்தினர். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதோடு இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. பெருங்களத்தூரில் பாமகவினரை காவல்துறையினர் தடுத்ததை கண்டித்து பல்வேறு இடங்களிலும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல் நாள் போராட்டம் தமிழகம் முழுக்க கவனத்தை ஈர்த்தது. டிசம்பர் 1ம் தேதி மட்டும் ஆயிரக்கணக்கான பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட 350க்கும் மேற்பட்ட பாமகவினர் மேல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
 
பிறகு இரண்டாம் நாளும் பாமகவினர் சென்னையில் போராட்டம் நடத்தினர். திருவல்லிக்கேணி மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய பாஜகவினர் 856 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முதல் இரண்டு நாள் தமிழகம் முழுக்க கவனத்தை ஈர்த்த பாமக போராட்டம் மூன்றாவது நாளிலிருந்து போராட்டம் நடக்கிறதா என்று கேட்கும் நிலைக்கு வந்து விட்டது. முதல் இரண்டு நாள் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பாமகவினர் கலந்து கொள்ள மூன்றாம் நாளில் அது சில நூறு என்றானது. அது அப்படியே தேய்ந்து இன்று பாமகவினர் போராட்டம் நடத்தினரா? என்று தேடிப்பார்க்கும் அளவுக்கு வந்து விட்டது.

சிறிய கட்சிகளின் போராட்டத்திற்கு கூட நூற்றுக்கணக்கானோர் திரளும் நிலையில் மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியின் போராட்டத்திற்கு அதுவும் கட்சியின் தலைமையே நேரடியாக அழைப்பு விடுத்த நிலையில் கூட மூன்றாம் மற்றும் நான்காம் நாள் போராட்டம் இப்படி பிசுபிசுத்து போனது பாமக தலைமைக்கு மட்டுமின்றி அரசியல் பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

முதல் நாள் அத்தனை வீரியமாக நடந்த போராட்டம் அடுத்து வந்த நாளில் வீரியம் குறைய பாமக தலைமையே காரணம் என சில குற்றசாட்டுகளும் வெளிவந்துள்ளது. முதல் நாள் போராட்டத்தில் ரயிலில் கல் எறிந்த பாமகவினர் பற்றி பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் பாமகவினரே கிடையாது என அன்புமணி கூறினார். அவரின் இந்த பதில் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை பாமக தலைமை கைவிட்டு விட்டது என்றே சில தரப்பினரால் பேசப்பட்டது. பாமகவினரின் போராட்டத்திற்கு ஆதரவு குறைந்ததற்கு காரணங்களில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.