thangam thennarasu angry talk against thambidurai
பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளராக மாறிவிட்டார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக அரசு கிடையாது. திமுக கூட்டணியில் இருந்த மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில்தான் நீட் தேர்வு வரவேண்டும் என கூறப்பட்டதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருக்கிறார்.
நீட் தேர்வு மூலம், தமிழகத்தில் அறிவிக்கப்படாத பாஜக செய்தி தொடர்பாளராக தம்பிதுரை மாறியிருப்பது வியப்பளிக்கிறது.
மக்களவை துணை தலைவருக்கு உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரி பிரச்சனைகளில் அவர் பாஜக செய்தி தொடர்பாளராக செயல்படலாம். ஆனால் நீட் தேர்வுக்காக, பாஜகவுக்கு வக்காலத்து வாங்கி லட்சக்கண க்கான கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீட் தேர்வு என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் முதலில் அதை திமுக எதிர்த்தது.
நுழைவு தேர்வை ரத்து செய்து பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நிலை நாட்டி, சமூக நீதியை காப்பாற்றிய திமுக அரசு என்றைக்கும் நீட் தேர்வை ஆதரிக்காது என்பதை தம்பிதுரை புரிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த நேரத்தில் 18-7-2013ல் நீட் தேர்வு கொண்டு வரும் மருத்துவ கவுன்சில் அறிக்கைகள் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது என்பது தம்பிதுரைக்கு தெரியவில்லை.
உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்தது மத்திய பாஜக அரசுதான் என்பதை மறைப்பதற்காக திமுக மீது வீண்பழி போட்டு பாஜகவையும் அதிமுக ஆட்சியையும் காப்பாற்றுகிறார் என்று தோன்றுகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டு, அதில் பங்கேற்க சென்ற மாணவர்களின் சட்டையை பிளேடு வைத்து வெட்டி, மாணவிகளின் தோடுகளை கழற்றும் அளவுக்கு மனித உரிமை மீறல்கள் தேர்வு மையங்களில் நடைபெற்றது.
மாணவ, மாணவிகளுக்கு இந்த அவமானங்கள் ஏற்பட்டது, அதிமுக ஆட்சியில்தான் என்பதை தம்பிதுரையால் மறுக்க முடியுமா?
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக ஆதரித்து சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற துரும்பை கூட எடுத்துப் போடாத தம்பிதுரை திமுக மீது குற்றம் சுமத்த தகுதியில்லாதவர்.
அந்த மசோதாக்கள் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பவில்லை என்று தெரிந்த பிறகு அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று கொடுக்க முயற்சிக்காதது அவர் வகிக்கும் மக்களவை துணை சபாநாயகர் பகுதிக்கு அழகல்ல.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
