இந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் தமிழர்களுக்கு கலகலவெனதான் துவங்கியிருக்கின்றது. அத்தனைக்கும் ஒன் அண்டு ஒன்லி காரணம் தங்கபாலுதான். ராகுலின் பேச்சை மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று காங்கிரஸின் தன்மானத்தை முட்டியை பேர்க்க வைத்துவிட்டார் மனிதர். இப்படித்தான் என்றில்லாமல் அவரது கெக்கே பிக்கே டிரான்ஸ்லேஸனை  வெச்சுத்தான் அகில இந்திய மீம்ஸ் கிரியேட்டர்களின் வயிறு நிரம்பிக் கொண்டிருக்கிறது கடந்த ஒரு வாரகாலமாய். 

ஆக்க்க்க வாய்புய்ச்சுதோ, மாங்கா புய்ச்சுதோ! என்று ஆளாளுக்கு தங்கபாலுவை வெச்சு நெட்டில் நெம்பியெடுத்து கிண்டலடித்ததன் விளைவாக மனிதர் தகரபாலு ஆகிவிட்டார். இந்த நிலையில் ‘ஏன் தல இப்படியொரு மொழிபெயர்ப்பை செஞ்சு ராகுலையே தெறிக்கவிட்டீங்க?’ என்று அவரிடம் கேட்டு வைக்க, அப்பவும் கொஞ்சங்கூட அலட்டிக்காமல் தன் சைடை நியாயப்படுத்தி தங்கம் சொன்ன பங்கமான பதில் இதுதானுங்க....

“அதெல்லாம் ஒண்ணும் பெரிய பிரச்னையில்லைங்க. என்ன நடந்துச்சுங்கிறதே தெரியாம ஆளாளுக்கு மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கிறாங்க. அது தப்பு... அன்னைக்கு தலைவர் ராகுல் பேசுன மேடையிலே, அவரோட மைக்குக்கு பக்கத்துலேயே ரெண்டு லவ்டு ஸ்பீக்கர் இருந்துச்சு. சாதாரணமா ஒரு ஸ்பீக்கரோட சவுண்டுக்கே காது சவ்வு கிழிஞ்சுடும், இதுல ரெண்டு ஸ்பீக்கர்னா எந்தளவுக்கு இருக்குமுன்னு யோசிங்க.தொண்டர்களும் தலைவர் ராகுலை பார்த்து ஆரவாரம் பண்ணிட்டேஇருந்தாங்க. எவ்வளவு சொல்லியும் அவங்க சத்தத்தை குறைக்கவேயில்லை.

இது போதாதுன்னு மேடை இருந்த ஏரியாவுல எதிர்காத்து வேற பலமா வீசுச்சு. ஆக (கூட்டணி தோஷம்)  எல்லா சவுண்டும் சேர்ந்து ஒரேடியாக ஓவர் சவுண்டாகிப் போயிடுச்சு. இதனால தலைவர் பேசுன எதுவுமே என் காதுல சரியாவே விழலை.” என்று செம்ம சமாளிப்பு காரணம் ஒன்றை தட்டிவிட்டவர், கட்டக்கடைசியில் வெச்சாரு பாருங்க ட்விஸ்ட்டு...“இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொண்ணூற்று ஒன்பது சதவீதம் நான் சரியாகதான் மொழிபெயர்ப்பு பண்ணினேன்” என்பதுதான்.

எங்கேயோ போயிட்டீங்க மிஸ்டர் கோல்டு!