தகுதிநீக்கத்திற்கு எதிரான மனுவை வாபஸ் பெறுவதில் உள்ள சிக்கல்களை தங்க தமிழ்ச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.  

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியது. தகுதிநீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் முரண்பட்ட தீர்ப்பளித்தனர். அதனால் இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. 

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருப்பதால், ஏற்கனவே 9 மாதங்களாக 18 தொகுதிகளிலும் மக்கள் நல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் இனியும் கால தாமதம் ஏற்பட விரும்பவில்லை என தெரிவித்த தங்க தமிழ்ச்செல்வன், தகுதிநீக்கத்தை எதிர்த்து தனது சார்பில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறப்போவதாகவும், ஆண்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தல் வைத்து புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 

தகுதிநீக்கத்திற்கு எதிராக தன் சார்பில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவது உறுதி என பலமுறை கூறினார் தங்க தமிழ்ச்செல்வன். தனது நிலைப்பாட்டை தினகரனிடம் கூறிவிட்டதாகவும் தினகரனும் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் கூட கூறினார். 

இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் தவிர மற்ற 17 தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், தகுதிநீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதில் நம்பிக்கை இல்லை. வேண்டுமென்றே வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. அதனால் வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றுமாறு கோரப்பட்டது. 

இதையடுத்து இன்று ஆண்டிப்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வனிடம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது தொடர்பாகவும், அவர் கூறியபடி இன்னும் மனுவை வாபஸ் பெறாதது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்தால் நியாயமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் 17 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது என்பது சரிதான் என்றார். 

எனது தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. இரண்டு நீதிபதிகள் அமர்வில் வாபஸ் பெறுவதா? அல்லது மூன்றாவது நீதிபதியிடம் வாபஸ் பெறுவதா? நான் வாபஸ் பெற்றால் உடனடியாக ஆண்டிப்பட்டி தொகுதி காலியானதாக அறிவித்து உடனடியாக தேர்தல் நடத்தப்படுமா? நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் நான் போட்டியிடலாம் என்றாலும், ஆட்சியாளர்கள் என்னை போட்டியிட விடாமல் ஏதாவது ஒரு வகையில் சிக்கல் கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இத்தனை சிக்கல்கள் உள்ளதால் மனுவை வாபஸ் பெறுவதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.