thanga thamizhselvan idea instead of chennai salem highway

மக்களின் எதிர்ப்புகளை மீறி சென்னை-சேலம் எட்டு வழி சாலை அமைப்பதற்கு பதிலாக வேறு ஒரு ஆலோசனையை தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் வழங்கியுள்ளார். 

சென்னை-சேலம் இடையே எட்டு வழி சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த சாலை அமைப்பதால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் கைப்பற்றப்படுவதால் விவசாயம் பாதித்து தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் என்று கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் விளைநிலங்கள் மட்டுமல்லாது மலைகள், மரங்கள் ஆகியவையும் அழிக்கப்படுவதால் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 

சென்னை-சேலம் இடையேயான எட்டு வழி சாலை அமைப்பதற்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். இந்த திட்டத்திற்கு எதிராக பொதுமக்களை போராட்டத்தை தூண்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டார். இந்த திட்டத்திற்கு எதிராக மக்களிடம் பேசிய சமூக ஆர்வலர் வளர்மதியும் கைது செய்யப்பட்டார்.

இப்படியாக சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவருமான தங்க தமிழ்ச்செல்வனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், மக்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி எட்டு வழி சாலையை அமைப்பதில் அரசு குறியாக இருக்கிறது. சென்னை-சேலம் இடையே எட்டுவழி சாலை அமைத்தால், பயண நேரத்தில் 45 நிமிடம் தான் குறையும். இதனால் ஒரு பயனும் இல்லை. அதற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி இடையேயான சாலையை விரிவுபடுத்தலாம். அப்படி அந்த சாலையை விரிவுபடுத்தினாலாவது பயனிருக்கிறது. சென்னை-சேலம் இடையேயான சாலை விரிவாக்கம் தேவையற்றது என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.