thanga thamizh selvan makes panneerselvam afraid

’எங்களுக்கு தமிழகமெங்கும் கிளைகள் இருக்கின்றன!’ என்று கோடை வெயிலிலும் கோட் சூட் போட்டு நம்ம வசந்த் அண்ட்கோ அண்ணாச்சி சீன் போடுவது போல் , கழக நிர்வாகிகள் அனைவரும் தங்களோடுதான் இருப்பதாக தான் போகுமிடமெல்லாம் மார் தட்டுகிறார் பன்னீரு. 

ஆனால் அவருடையை சொந்த மாவட்டத்திலேயே கழக நிர்வாகிகளில் 95% பேர் அவரணியில் இல்லை என்று லிஸ்டு போட்டு தாரைதப்பட்டையுடன் கிழித்தெடுத்திருக்கிறார் எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன். 

‘என்னைய வர்புறுத்தினாங்க, அசிங்கப்படுத்தினாங்க, அழவுட்டாங்க.’ என்று சசி அண்ட்கோ மீது புகார் பட்டியல் வாசித்தபடி அம்மா சமாதியில் புரட்சியை ஆரம்பித்தார் பன்னீர் செல்வம். அதன் பிறகு கட்சி அந்தலிசிந்தலியாகி போனது. தோ இன்னைக்கு வரைக்கும் தினம் தினம் போராட்டம்தான், பஞ்சாயத்துதான், பிரச்னைதான். 

இத்தனை ரவுசுகளுக்கும் காரணமான பன்னீரை ‘போனாப்போவுது’ என்று மீண்டும் ஏற்றுக் கொள்ள தினகரன் கூட தயாராகிவிட்டதாக் உறுதியான தகவல். ஆனால் தினகரனின் கைக்குள்ளேயும், காலுக்குள்ளேயுமாய் வலம் வரும் தங்கத்தமிழ் செல்வன் மட்டும் பன்னீருக்கு எதிராக படைதிரட்டி நிற்கிறார் (தனியாகத்தான்).

என்ன நடந்தாலும் சரி பன்னீரை மீண்டும் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வின் அதிகார மையமாக விடவே கூடாது என்பதுதான் தங்கத்தின் தலையாய நோக்கம். 

இதற்காக பல வகைகளில் பன்னீரின் பெயரை டேமேஜ் செய்து கொண்டிருக்கும் தங்கம் சமீபத்தில் ஒரு சர்வேயை கையில் வைத்தபடி ஆடிக் கொண்டிருக்கிறார். அதாவது பன்னீரின் சொந்தமாவட்டமான தேனியில் அவரது செல்வாக்கு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை ஸ்கேன் செய்து தட்டிவிடப்பட்டிருக்கும் ரிப்போர்ட் அது.

அதில் போடி தொகுதி எம்.எல்.ஏ.வான பன்னீரை தவிர அம்மாவட்டத்தின் ஏனையை பிற மூன்று தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சசி தலைமையிலான தினகரனின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள எட்டு ஒன்றிய செயலாளர்களும் தினகரனின் ஆதரவாளர்களாம், ஆறு நகர செயலாளர்களில் நான்கு பேர் தினகரனின் கைகளில், அறுநூற்று பதினைந்து ஊராட்சி கழக செயலாளர்களில் 80% பேர் தினகரன் கூடாரத்தில் என்று நீ.....ள்கிறதாம் லிஸ்ட்.

பன்னீருக்கு ஆதரவாக தேனி எம்.பி. பார்த்திபனும், இரண்டு நகர செயலாளர்கள், சில பேரூர் கழக செயலாளர்கள் என்று சொற்ப எண்ணிக்கையில்தான் நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்றும் அந்த ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. 

இதைத்தான் கையில் எடுத்துக் கொண்டு ஆடும் தங்கத்தமிழ்செல்வன், பன்னீரின் கூடாரத்தில் உட்கார்ந்திருக்கும் நிர்வாகிகளுக்கு போன் போட்டு ‘தேனியிலேயே போணியாகாத இந்த மனுஷனை நம்பிட்டு நின்னீங்கன்னா உங்களோட அரசியல் வாழ்க்கையை கோணி போட்டு மூடிடுவாரு.

தன்னை ஏத்திவிட்ட தினகரன் எனும் ஏணியையே மிதிச்சு தள்ளுனதுதான் பன்னீரோட அரசியல் பாணி.” என்று டி.ஆர். போல் அடுக்கு மொழி பேசியவர் ‘சட்டுபுட்டுன்னு கிளம்பி வாங்கய்யா. அண்ணன் (தினகரன்) கிட்டே சொல்லி சிறப்பான அரசியல் வாழ்க்கைக்கு வழி காட்டுறேம். ஏன்னா இன்னும் கொஞ்ச மாசத்துல அவர்தாம்ணே தமிழ்நாட்டோட சி.எம்.” என்று கலக்கலாக கேன்வாஸ் செய்கிறாராம். 

அந்த அலசல் சொன்ன தகவலும், அதை வைத்துக் கொண்டு தங்கம் செய்யும் உரசலும் பன்னீரை ரொம்ம்ம்ம்பவே டார்ச்சராக்கி இருக்கிறதாம். 
ஹூம், புத்துணர்வு முகாம் போயிட்டு வந்த பிறகும் ஒரு மலர்ச்சியுமில்லையே தலைவா!