thanga Thamilshelvan to be the minister in edappadi govt

தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கியதால், தற்போது இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு சென்றுள்ளது. தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருந்த தினா கேங் கடும் அதிர்ச்சியைடந்தது. இதில், சபாவுக்கு எதிரான தனது மனுவை நீதிமன்றத்தில் வாபஸ் வாங்கப் போகிறேன் எனவும், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் எனவும் ஆண்டிபட்டி தங்கமும் அறிவித்தார். 

எம்.எல்.ஏ பதவியை தக்க வைக்கும் பொருட்டு தினாவின் படை தளபதியான ஆண்டிபட்டி தங்கம் உள்ளிட்ட 18 MLA க்களையும் எடப்பாடி பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

இதனையடுத்து எடப்பாடி தங்கம் உட்பட மற்ற எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வந்தால் மகிழ்ச்சிதான் என நேரிடையாகவே அழைப்பு விடுத்தார். அதோடு, பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என இன்று காலை மீன் மந்திரியும் சொன்னார். எனவே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பக்கம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தினாவின் படை தளபதிகளான தங்கமும் வெற்றியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் .

அப்போது பேசிய ஆண்டிபட்டி தங்கம், “நாங்கள் அனைவரும் தினகரன் பக்கமே ஒற்றுமையுடன் இருக்கிறோம். வழக்கை வாபஸ் பெறுவது எனது தனிப்பட்ட விருப்பம். அதனால், கருத்து வேறுபாடு என கூறுவதில் அர்த்தமில்லை. எங்களில் ஒருவரையாவது முதல்வர் பழனிச்சாமி தரப்பு இழுத்துவிட்டால், நாங்கள் அனைவருமே அங்கு சென்று விடுகிறோம். ஆனால், அவர்களால் எங்களில் ஒருவரையாவது இழுக்க முடியுமா?” என சவாலாக பேசினார்.

என்னதான் தங்கம் தம் கட்டி பேசினாலும் , தங்கம் வருத்தத்தில் இருப்பது தெரிந்து எடப்பாடி தரப்பில் தொடர்ந்து அவரை துரத்த ஆரம்பித்து இருக்கிறார்களாம். அண்ணா நகரில் இருக்கும் அமைச்சர் ஒருவர் தங்கத்தின் அண்ணாநகர் வீட்டில் இரவு மணிக்கணக்காக தங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். "நீங்க ஓகேன்னா உங்களை அமைச்சராக ஆக்கவும் அண்ணன் ரெடியா இருக்காரு... என பலமணி நேரமாக டீல் நடந்திருக்கிறது.

அப்போது தங்கமும், ‘நான் தான் இப்போது எம்.எல்.ஏ. இல்லையே அப்புறம் எப்படி அமைச்சர் ஆக முடியும்?’ என கேட்டாராம். அதற்கு அந்த மான்புமிகுவோ, ‘நீங்க ஓகே சொல்லுங்க தங்கம்... நாங்க உங்கள மினிஸ்டரா ஆக்கி காட்டுறோம்' என்று சத்தியம் செய்கிறோம் என்ற அளவிற்கு தங்கத்தை பட்டை தீட்டியதாம் எடப்பாடி தரப்பு.