எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாச்சு.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாலாச்சு... அத்தோட அதிமுக முடிஞ்சுபோச்சு என தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

 

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தேர்தல் முடிவு ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்து இருக்கிறது. மு.க.ஸ்டாலினால் மட்டுமே ஒரு நல்ல தலைமையை, நல்ல திட்டங்களை செயுய முடியும் என உணர்த்தி இருக்கிறது. அந்த நல்ல முடிவை ஏற்று அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளேன். கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் சண்டை வந்தது உண்மை. அதெல்லாம் காலம் கடந்து விட்டது. 47 ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் அனைவரையும் அனுசரித்து போகக் கூடிய மனப்பக்குவத்துக்கு வந்து விட்டார். அவரது உழைப்பை முதலில் மதிக்க வேண்டும். 

அதிமுகவில் இருந்து வந்த நிர்வாகிகள் அண்ணன் ஏ.வ.வேலு, செல்வக்கணபதி, சேகர் பாபு, செந்திபாலாஜி உட்பட திமுகவுக்கு வந்த அனைவரையும் நல்லபடியாகத்தான் திமுக பார்த்துக் கொள்கிறது. திமுகவிடம் விரோத மனப்பான்மை இல்லை. அண்ணா சொன்ன மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்கிற கூற்றை ஸ்டாலின் கடைபிடித்து வருகிறார். ஒரு கட்சி ஒற்றைத் தலைமையின் கீழ் மட்டுமே செயல்பட வேண்டும்.

அப்படி ஒற்றைத் தலைமையில் கீழ் செயல்பட்டு வருவதால் தான் திமுக தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாத நிலையில் அதிமுக இப்போது இருக்கிறது. அதிமுகவை பாஜக இயக்கிக் கொண்டிருக்கிறது. அதில் தன்மானத்தை இழந்து நான் சேரவிரும்பவில்லை. பதவி கேட்டுப்பெறுவதல்ல. உழைத்த பிறகு தலைமை பார்த்து பதவி கொடுக்க வேண்டும். 

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாச்சு.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாலாச்சு... அத்தோட அதிமுக முடிஞ்சுபோச்சு.. அதிமுக -திமுக எம்.எல்.ஏக்கள் ஒரே வண்டியில் செல்லக்கூடிய காலகட்டம் வந்து கொண்டிருக்கிறது. ஆகையால் பழசை பற்றி பேசி பயனில்லை. அமமுகவில் இருந்தது உண்மை. அதற்காக உழைத்தது உண்மை. அங்கிருந்து வெளியேறிய பிறகு அதைப்பற்றி பேசுவது நல்லதல்ல’’ என அவர் தெரிவித்தார்.