தமிழகத்தில் ஊழல் ஆட்சியை கலைக்க அதிமுகவுக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களிப்போம் என அமமுகவின் கொள்கைபரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மே 23-ம் தேதி எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்படும் என மு.க.ஸ்டாலின், தினகரன் கூறி வருகின்றனர். 

இதனிடையே கடந்த 7-ம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். மே 23-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. இதற்காக திமுக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும். அப்போது அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்றார். ஆனால் திமுக ஆட்சியமைக்க ஆதரவு தரமாட்டோம் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போது அதிமுக ஆட்சி எதிராகவே அமமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பர். தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுகவே வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். டி.டி.வி. தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைவதற்காக இந்த ஆட்சியை கலைப்போம். 

திமுகவுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? அதிமுக ஆட்சியை கலைக்க முயன்று, திமுகவோடு கூட்டணி வைத்த ஓபிஎஸ் தான் குற்றவாளி என விமர்சனம் செய்தார். பதவியை நாங்கள் பெரிதாக நினைத்திருந்தால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்போம் என்றார். அதிமுக ஆட்சியை கலைப்பு உறுதி என சத்தியமிட்டு தங்க தமிழ்செல்வன் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.