கரூர் செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்த ஆண்டிபட்டி தங்க தமிழ் செல்வன் விரைவில் திமுகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த நான் ஒருபோதும் தி.மு.க.வில் சேரமாட்டேன் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். 

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் பிரச்சனையில் அவர்களுக்கு எதிராக  தீர்ப்பு வந்ததில் இருந்தே டி.டி.வி.தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் தான் பெங்களூருவில் சசிகலாவை தினகரன் சந்திக்கும் சமயங்களில் உடன் செல்வதில்லை என்றும் செய்திகள் பரவின. 

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தங்க தமிழ் செல்வனை திமுக பக்கம் இழுக்கும் படலம் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் வெளிவந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் ’’நான் அ.தி.மு.க. குடும்பத்தில் இருந்து வந்தவன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டன். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் விசுவாசி. அதிமுக இரண்டாக பிரிந்த போதும் சசிகலாவின் தலைமையை ஏற்று வந்தவன். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் அரசியலில் பயணித்து வருகிறேன். நான் தி.மு.க.வில் சேரப் போவதாக சொல்வது கற்பனைக்கு எட்டாதது. அதற்கு வாய்ப்பே இல்லை. அமமுக ஆட்சியில் இருக்கும்போது எனக்கு அமைச்சர் பதவி தரவில்லை என மறுத்தால் கூட நான் அதிருப்தியில் இருக்கிறேன் என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்படியொரு நிலை அமமுகவில் இல்லையே’’ என அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.