எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு போதுமான எம்எல்ஏக்கள் வரமாட்டார்கள் !! அடித்துக் கூறும் தங்க தமிழ்செல்வன் !!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் கூட்டும் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு குறைந்த அளவு எம்எல்ஏக்கள் தான் வருவார்கள் என்றும் பெரும்பாலான எம்எல்ஏக்கள் தங்கள் பக்கமே உள்ளனர் என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்  ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் புதுச்சேரி  சொகுசு ஹோட்டலில் தங்கி, போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்துள்ளன.

இது தொடர்பாக இன்று திமுக எங்ம.பி க்கள் இன்று  ஜனாதிபதியையும் சந்திக்க உள்ளனர். 

இந்நிலையில் புதுச்சேரியில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அவர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு விளக்கம் கேட்க ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., தங்கதமிழ்ச்செல்வனும், நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ஏழுமலையும் நேற்று புதுச்சேரியில் இருந்து சென்னை வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன், எங்களுக்கு எம்.எல்.ஏ., பதவியே தேவையில்லை என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  இன்று கூட்டியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் போதிய எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

தங்கள் தரப்பில் உள்ள  ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்களை மிரட்டுவதற்காகவே எங்களை அழைக்காமல் எம்.எல்.ஏ., கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.