thamizisai reply rahuls tweet on mersal issue remind that kutrapathirigai film
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று காலை தனது டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.
அதில், மிஸ்டர் மோடி, சினிமா என்பது தமிழ்க் கலாசாரம் மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு. மெர்சல் படத்திற்கு இடையூறு செய்வதன் மூலம்
தமிழின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம் - என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் நம்மிடம் பேசியபோது, கருத்து சுதந்திரம் பேசும் ராகுலுக்கு குற்றப்பத்திரிகை படத்தை நினைவூட்ட விரும்புகிறேன்... என்று தெரிவித்தார்.
தற்போது, மெர்சல் பட பிரச்னை, திரைப்படத் தணிக்கைக் குழு பக்கம் சென்றுள்ளது. பாஜக., சார்புள்ளவரே தணிக்கை செய்தவர் என்று கூறினார்கள் மெர்சலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள்.
பொதுவாக, திரைப்படத் தணிக்கைக் குழுவும் கூட அரசியல் ரீதியான நியமனங்களுடன் அவ்வப்போது மாறிவிடுவதுண்டு. ஆளும் தரப்புக்கு எதிரான கருத்துகள், அரசியல் ரீதியாக தாக்கப்படும் கருத்துகளை முன்னர் இருந்த அரசுகள் பெரும்பாலும் அனுமதித்ததில்லை. திரைப்படத் தணிக்கைக்குழுவில் இருந்தவர்கள் பொதுவாக இடதுசாரி ஆதரவாளர்களாக, முற்போக்குச் சிந்தனையாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்போது காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்டவர்களுடன் கருத்து மோதல்களும் தலைதூக்கும். எந்தப் படமும் அவர்களை மீறி வெளியில் வருவது சற்று கஷ்டம்தான்!
இத்தகைய பின்னணியில், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெகு நாட்கள் உழைத்து இயக்கிய படம் குற்றப் பத்திரிகை. இந்தப் படம், ராஜீவ் காந்தி படுகொலை குறித்த பின்னணியுடன் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் படம் தணிக்கைக் குழு முன் சென்றபோது, அங்கேயே தங்கிவிட்டது. இதே பின்னணியுடன் ஒற்றைக் கண் சிவராசன் குறித்த தனி படமும் தணிக்கைக் குழுவிடம் சிக்கிக் கொண்டது.
சுமார் 20 ஆண்டுகள் குற்றப்பத்திரிகை படம் தணிக்கைக் குழு வசமே இருந்தது. பின்னாளில் சூழ்நிலைகள் மாறியபோது, குற்றப்பத்திரிகைக்கு சான்று கொடுத்து, வெளியில் விட அனுமதி கொடுத்தது தணிக்கைத் துறை. ஆனால், 20 வருடங்கள் கழித்து வெளிவந்ததால், ஒன்றுக்கும் ஆகாமல், வந்த வேகத்திலேயே உள்ளே சென்றது குற்றப்பத்திரிகை படம்.
காலம் கடந்து வந்த அந்தப் படத்தைப்போல், விஜய்யின் மெர்சலும் இப்போது தணிக்கைத் துறை மூலம் தடங்கலை சந்தித்திருந்தால்... என்ன ஆகியிருக்கும்..? விஜய் படம் இன்னும் நாலைந்து வருடங்களுக்குப் பிறகு வெளியாகி, வந்த வேகத்திலே கவனிக்கப்படாமல் போயிருக்கும்! அந்த நாலைந்து வருடங்களுக்குள் ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் எல்லாம் மாறிப் போயிருக்கும்.
மத்திய அரசு 3 மாதங்களே ஆன ஜி.எஸ்.டி வரி குறித்து பொதுமக்களிடம், வணிகர்களிடம் கருத்து கேட்டு, அதனை ஒவ்வொரு முறையும் சீரமைத்து வருகிறது.
இந்த மறு சீரமைப்பு முறைகளால், இன்னும் ஓரிரு வருடங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பு நிச்சயம் மாற்றம் கண்டு, மக்களுக்கு எளிதான முறையாக மாறிப் போகும் என்ற சூழலில், இதே மெர்சல் அடுத்த நான்கு வருடங்கள் கழித்து வரும்போது, எவர் கவனமுமே பெறாமல் காலம் கடந்துபோயிருக்கும்.
பாஜக., ஆட்சியில் உள்ள காரணத்தாலேயே இப்போதும் தணிக்கை முடிந்து படம் வெளி வந்திருக்கிறது. கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்கும் அரசு என்பதால்தால், இவ்வளவுக்கு அனைவரும் விமர்சிக்க முடிகிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். மத்திய அரசின் நெருக்குதல் எதுவும் தணிக்கைக்குழு உள்ளிட்ட எதன் மீதும் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இதை ராகுல் உணர வேண்டும்.
காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் மெர்சல் பத்து வருடம் கழித்துதான் ரிலீஸ் ஆகியிருக்கும்! - இவை எல்லாம் பாஜக.,வினர் முன் வைக்கும் வாதங்கள்!
