தமிழகத்தில் அதிமுகவில் எற்பட்டிருக்கும் பிளவை பயன்படுத்தி பாஜக திட்டமிடுவதாக அண்மையில் நடைபெற்ற முரசொலி பவள விழாவில் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முரசொலி பவள விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தன் உரை முழுவதும் பாஜகவையே தாக்கி பேசியுள்ளார். அவரின் ஆதங்கத்தின் மூலம் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, தாக்கம் அவருக்குத் தெரியத் தொடங்கியிருக்கிறது. மோடி அரசு, மோசடி அரசு மோசடி அரசு என்று கூறியிருக்கிறார்.

ஆனால், 2ஜி நாயகர்கள் நம்மை விமர்சிப்பது விந்தையாக இருக்கிறது. திராவிட இயக்க வாரி‘சகள், திகார் சிறைக்கு போன வரலாறு மறக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ், தமிழ் என்று சொல்லி அரியணை ஏறியவர்கள், ஆறுமுறை ஆண்டபோதும் தமிழை அரியணை ஏற்றினார்களா? தமிழ் இனக் காவலர்கள் என்று கூறிக் கொண்டு இலங்கையில் தமிழினம் அழிந்தபோதும், பதவி சுகத்தால் அதற்குத் துணை போனவர்கள். மோடி கறுப்புப் பணத்தை ஒழிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

அதிமுக பிளவைப் பயன்படுத்தி காலூன்ற பாஜக முயற்சி செய்வதாகக் கூறுகிறார். அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவைப் பயன்படுத்தி தன் சட்டையைத் தானே கிழித்துக் கொண்டு பதவி சுகம் தேடி கோட்டைக் கனவுடன் இலவு காத்த கிளியாக, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க காத்திருப்பது யார்? என்றும் உங்கள் சவாலை எதிர்கொண்டு ஜனநாயக முறையில் பாஜக வெற்றிக்கொள்ளும் என்று ஸ்டாலினுக்கு மறுமொழி கொடுத்துள்ளார் என்றும் தமிழிசை செளந்திரராஜன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.