Asianet News TamilAsianet News Tamil

தரமா ஒரு சம்பவம் பண்ணப்போறோம்... வேல்முருகன் பகிரங்க அறிவிப்பு!!

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களைத் திணிக்காதே! தமிழ்த் தேசியத் தன்னுரிமையைப் பறிக்காதே! வரும் 23ந் தேதிய மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் மூலம் பாஜக மோடி அரசை எச்சரிக்கிறது என தெரிவித்துள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
 

Thamizhaga vazhvurimai Party Announce for protest
Author
Marakkanam, First Published Jun 20, 2019, 1:18 PM IST

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களைத் திணிக்காதே! தமிழ்த் தேசியத் தன்னுரிமையைப் பறிக்காதே! வரும் 23ந் தேதிய மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் மூலம் பாஜக மோடி அரசை எச்சரிக்கிறது என தெரிவித்துள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்பிலேயே மனிதரை மேல், கீழ் எனப் பிரிக்கிறது சனாதனம்; அருவருப்பான இந்த இழிசெயல் இயற்கைக்கே முரணானது, மானுடத்திற்கு எதிரானது; எனவே மன்னிக்கவே முடியாதது. ஆனால் குற்றமெனத் தெரிந்தே இதனைச் சித்தாந்தம் என்கிறது பாஜக. சூழ்ச்சி, சதி, மோசடியால் அதைச் செயல்படுத்தவும் செய்கிறது. 

இத்தகைய பாஜக, நரேந்திர மோடி தலைமையில் மத்திய ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, “தமிழ் - தமிழர் - தமிழ்நாடு” என்ற வரலாற்று நிகழ்வையே அப்புறப்படுத்தப் பார்க்கிறது. அதற்காக அணுவுலை, நியூட்ரினோ, மீத்தேன், நீட், சாகர் மாலா, பாரத் மாலா, ஹைட்ரோகார்பன் என பேரழிவுத் திட்டங்களை தமிழகத்தில் திணிக்கிறது; இப்படியாக, தமிழ்த் தேசிய தன்னுரிமையைப் பறிக்கிறது.

தமிழகத்தைப் பாழ்நிலமாக்கவும் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கவும் அண்மையில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைரோகார்பன் எடுக்க ஸ்டெர்லைட் வேதாந்தா, ரிலையன்ஸ் அம்பானி ஆகிய கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியிருக்கிறது மோடி அரசு. அதனை அரசு நிறுவனமான ஒஎன்ஜிசியின் ஒத்துழைப்பிலேயே செயல்படுத்தவும் உதவுகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரை முழுவதிலும் கடலிலும் நிலத்திலும் அமையும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இவை. புவி அன்னையின் அடிமடியிலேயே கைவைக்கும் இந்தக் கார்ப்பொரேட் பயங்கரவாதத்தால் நீர்வளம், நிலவளம் அழியும்; இயற்கையும் சுற்றுச்சூழலும் மடியும்.

இதனை எதிர்த்து, மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் அறிவித்திருக்கிறது ‘பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்!’ வரும் 23ந் தேதி மாலை 5.30 மணி  முதல் 6.00 மணி வரை மரக்காணத்திலிருந்து ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்கிறது இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் கடலூரில் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கிறார். தமிழக மக்கள் பெருந்திரளாக இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறோம்.

ஜனநாயக முறையிலான இந்த அறவழிப் போராட்டத்திற்கு அனுமதியளிக்க மறுத்து, சட்டத்துக்குப் புறம்பாக அழிம்பு செய்தது கே.பழனிசாமியின் அதிமுக அரசு. இது சனாதன பாஜகவுக்கு அடிப்பொடி வேலை செய்ததாகும். அதனை நீதிமன்றம் சென்று முறையிட்டே, இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் “தமிழ் - தமிழர் -  தமிழ்நாடு” வரலாற்று நிகழ்வை அப்புறப்படுத்தும் பாஜகவின் திட்டத்திற்கு அதிமுக அரசு ஒத்துழைப்பது தெரிகிறது.

இந்த இரண்டகத்தை அது கைவிட வேண்டும்; புதுச்சேரி மாநில முதல்வர் அங்கு ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்ததை தமிழக அரசு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களைத் திணிக்காதே! தமிழ்த் தேசியத் தன்னுரிமையைப் பறிக்காதே! வரும் 23ந் தேதிய மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் மூலம் பாஜக மோடி அரசை எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios