தமிழகத்தில் பெரியார்  சிலைகள் உடைக்கப்படுவதைக் கண்டிக்கும்  வகையில் மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி இன்று சட்டப் பேரவைக்குள் பெரியார் படம் போட்ட டி.சர்ட் அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிமுக ஆதரவுடன் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகியவர் மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி. ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஆதரவாக நடந்து கொள்வார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி அரசுடன் பெரும்பாலான பிரச்சனைகளில் எதிர்ப்பு அரசியல் நிலையையே எடுத்து வருகிறார். நேற்று சட்டப் பேரவையில் ரத யாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனி ஒரு ஆளாக பெரும் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, தமிமுன் அன்சாரி இன்று பெரியார் படம் போட்ட டி.சர்ட் அணிந்து சட்டப் பேரவைக்கு வந்தார்.

வாயிற் காவலர்கள் அவரை சட்டப் பேரவைக்குள் விடலாமா ? என தயங்கினர். பின்னர் அவரை அனுமதித்தனர்.

தந்தை பெரியாருக்கு ஆதரவு தெரிவித்து தமிமுன் அன்சாரி பெரியார் படம் போட்ட டி.சர்ட் அணிந்து வந்தததை பேரவைக்குள் இருந்த எம்எல்ஏக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.