காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அங்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற விவசாயத்தை பாழாக்கும் எந்த ஒரு திட்டமும் அனுமதிக்கப்படாது என்றும் கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. அரசியல் கட்சித்தலைவர்கள் முதல்வரின் முடிவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மனிதநேய ஜனநாயக கட்சித்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரியும் முதல்வரின் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை பகுதிகளான காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.

தென்னிந்தியாவுக்கு சோறு போடும் வளமிக்க நிலத்தை , கார்ப்பரேட் நிறுவனங்கள் மீத்தேன், ஹைட்ரோகார்பன்  போன்ற திட்டங்களுக்காக சூறையாடவிருந்த நிலையில், தமிழக முதல்வரின் துணிச்சல் மிக்க இந்த அறிவிப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பை சட்டப்பூர்வமாக மாற்ற உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.தமிழக சட்டமன்றத்தில்  இக்கோரிக்கையை, மனிதநேய ஜனநாயக கட்சியின்  சார்பில்   மூன்று முறை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன்.அந்த வகையில்   இந்த அறிவிப்பானது எங்களை போன்றவர்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்காக போராடிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் இத்தருணத்தில் வாழ்த்துக்களையும்  தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் சரி.. சட்டத்துக்குள்ள கொண்டு வாங்க..! அன்புமணி ராமதாஸ் அதிரடி..!