சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகுவதில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக புதிய சட்டதிருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மொத்தம் 997 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு சராசரியாக 300 தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் 100 பெரிய, நடுத்தர பட்ஜெட் படங்கள் வெளியாகின்றன. 100 சிறிய திரைப்படங்கள் தட்டுத்தடுமாறி வெளியாகின்றன. மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகாமல் முடங்கி விடுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் திரையரங்குகள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை மட்டும் 1200-க்கும் அதிகம் என்றும், அந்தத் திரைப்படங்களை தயாரித்த வகையில் முடங்கிக் கிடக்கும் தொகை ரூ.2,500 கோடிக்கும் அதிகம் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழகத்தில் பெரிய நட்சத்திரங்கள் நடித்து, பெரிய பட்ஜெட் படம் வெளியாகும்போது 70 முதல் 80 சதவிகித திரையரங்குகள் அந்த ஒரு படத்துக்கே ஒதுக்கப்படுகின்றன. இதனால் அதே தேதியில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட திருநாள்களின்போது அனைத்து திரையரங்குகளையும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள்தான் ஆக்கிரமிக்கின்றன. திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் சிலா், சிண்டிகேட் அமைத்துக் கொண்டு திரையரங்குகள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு முடிவு கட்ட வேண்டும்.

அப்போது தான்அனைத்துத் தரப்பினரும் திரைப்படம் தயாரிக்க முன்வருவாா்கள். அதற்காக திரைப்படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்குவது முறைப்படுத்த வேண்டும். இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பு ஏற்படுத்த வேண்டும். தவறு செய்பவா்களை தண்டிக்கும் அதிகாரம் அந்த அமைப்புக்கு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, எவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் நடித்த படமாக இருந்தாலும், எவ்வளவு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதற்கு மொத்தமுள்ள திரையரங்குகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் கூடுதலாக ஒதுக்கப்படக்கூடாது. இதற்கு ஏற்ற வகையில், விதிகளை வகுக்கவும், தேவைப்பட்டால் சட்டத் திருத்தம் கொண்டு வரவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் விடுமுறை தினத்தில் சரக்கு விற்பனை அமோகம்..! முண்டியடித்து வாங்கிய குடிமகன்கள்..!