நீட் தேர்வு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக திரித்துப் பேசுபவர்களை திருப்பி அடிப்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரட்விடது. இதனால் தனது மருத்துவ கனவு தகர்ந்து போனதையடுத்து அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பபை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டோர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திருச்சியில் பாஜக சார்பில் நீட் தேர்வுக்கு ஆதரவாக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், தொண்டர்கள் என சொற்ப அளவிலேயே திரண்டிருந்தனர்.

இதனை ஆயிரக்கணக்கானோர் சமுக வலைதளங்களில் கிண்டல் செய்திருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, திமுக கூட்டத்தைவிட பாஜக கூட்டத்திற்கு அதிக ஆட்கள் வந்திருந்ததாக தெரிவித்தார்.

ஆனால் சிலர் அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவலை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

இனிமேல் பாஜகவுக்கு எதிராக திரித்துக் கூறுபவர்களை திருப்பி அடிப்போம் என தமிழிசை அதிரடியாக தெரிவித்தார்.