மக்களவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பிரதமருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார். 

இதை தொடர்ந்து ஒரு நிமிடம் என சபாநாயகரிடம் அனுமதி கேட்டு  பேசிய அதிமுக எம்.பி., தம்பிதுரை, மேக் இன் இந்தியா பற்றி பேசும் மத்திய அரசு, ஒப்பந்தத்தை ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். தம்பிதுரையின் இந்த பேச்சுக்கு ராகுல்காந்தி கைதட்டி தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். 

பின்னர் கேள்விகளுக்கு பதிலளித்து  ராணுவ பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம், பாஜக ஆட்சியில் இறுதி செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.

அந்த ஒப்பந்தமானது கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது போடப்பட்டதாக கூறினார். மேலும் 36 ரஃபேல் ரக போர் விமானங்கள் தவிர மற்ற அனைத்து விமானங்களுக்கும் மேக் இன் இந்தியா ஒப்பந்தம் பொருந்தும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிரதமரை அவமரியாதையாக பேசும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் ஆவேசமாக கூறிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொய்யான தகவல்களை  மக்களுக்கு அளித்து வருவதாககுற்றம்சாட்டினார்.