thambidurai speaks about alliance with bjp
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டது. இவற்றில் 37 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து மக்களவையில் 37 எம்பிக்களுடன் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக அதிமுக விளங்கிவருகிறது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழக அரசு, மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து, மத்திய பாஜக அரசை காப்பாற்றுவதற்காகவே அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
எதிர்க்கட்சிகள் என்னதான் குற்றம்சாட்டினாலும் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு என்று அதிமுக இதுவரை கூறவில்லை. பாஜகவுடனான கூட்டணி குறித்து உறுதியான நிலைப்பாட்டை அதிமுக தெரிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரையிடம், அடுத்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தம்பிதுரை, இதுவரை எந்த கூட்டணியும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் தனித்த கட்சியாகவே செயல்பட்டு வருகிறோம். தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இப்போது கூறமுடியாது. தேர்தல் நேரத்தில் தலைமை கழகம்தான் முடிவெடுக்கும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
